ஓமடியாமடு கிராமத்தில் பொலிஸ் நடமாடும் சேவை நிலையம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓமடியாமடு கிராமத்தில் பொலிஸ் நடமாடும் சேவை நிலையம் செவ்வாய்கிழமை மாலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தம்மிக்க தயானந்த பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக வாகரை பிரதேச சபை தவிசாளர் எஸ்.கோணலிங்கம், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.பாலமுரளி, எஸ்.மோகனதாஸ், எஸ்.எம்.தாஹீர், எம்.எச்.றஹீம் முகம்மட், அந்தோனி லில்லி, மகாவலி திட்ட பொறியியலாளர் வி.செல்லத்துரை, புணாணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபாலி ஹேரத், வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.சிவதர்சன், ஓமடியாமடு வேலமுகன் பாடசாலை அதிபர் கே.கேதீஸ்வரன், மதகுருமார்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலும், பொது மக்களுக்கு அவர்களின் காலடிக்கு சென்று உதவும் வகையிலும் இந்த நடமாடும் சேவை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஒரு மாத காலத்திற்கு இயங்கும் இந்த நடமாடும் சேவை நிலையம் ஊடாக பொது மக்களுக்கான பல்வேறு சேவைகள் வழங்கப்படவுள்ளதுடன், இப்பிரதேச வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும், போதை ஒழிப்பு நடவடிக்கைக்கும் முக்கியமாக இவ்வேலைத் திட்டம் அமையப்படவுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது பிரதேசத்திலுள்ள முள்பள்ளி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டதுடன், பிரதேச மக்களின் நலன்கருதி நூறு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது. வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இருந்து ஓமடியாமடு கிராமம் 40 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிராமத்திற்கு பொலிஸ் என்னும் தலைப்பிலான பொலிஸ் நடமாடும் சேவை நிலையங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பன்னிரன்டு பொலிஸ் நிலையங்களினால் திறந்து வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.