ஆசிரியர்கள் எதிர்நோக்கும் கைவிரல் அடையாளப் பிரச்சினைக்கு மாற்றம் தேவை

திருமணமான பெண் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் கைவிரல் அடையாளம் இடும் நேரவிடயத்திற்கு மாற்றந்தேவையென கிழக்கு மாகாணசபையின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

இது தொடர்பில், ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கையிலே இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில்,

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் பாடசாலைகள் 1108, உள்ளன. இதில் தேசிய பாடசாலைகள் 30ஆகும் எமது மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் வசதிகள் கூடிய பாடசாலைகள், கஸ்ரப்பாடசாலைகள், அதிகஸ்ரப் பாடசாலைகள் என அண்ணளவாக 356 பாடசாலைகள் உள்ளன. இதில் 10-தேசியபாடசாலைகள்,05கல்விவலயங்கள்,14கோட்டக்கல்வி அலுவலகம் இங்கு சேவையாற்றுகின்ற ஆசிரியர்கள் அண்ணளவாக 5140ற்குமேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளதாக அறியக் கூடியதாக உள்ளது.

அர்ப்பணிப்புமிக்க கல்விச் சேவை ஆசிரியர்களின் விடா முயற்சியினால் எமது மாவட்டத்தின் கல்விநிலை வளர்ச்சி உறுகின்றது. இப்படிப்பட்ட சேவையைச் செய்யும் ஆசிரியர்களுக்கு பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கின்ற போதிலும் குறிப்பாக,பெண் ஆசிரியர்கள் அண்மைக்காலமாக எதிர்கொள்கின்ற புதுப்பிரச்சினையாக கைவிரல் அடையாளம் இட்டு வரவை பதிவு செய்வதில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக காலை 7.30மணிக்குமுன் ஆசிரியர்களாக இருக்கின்ற குடும்பத்தலைவிக்கு தனக்கான கடமைகளை
முடிப்பதற்கு நேரம் போதாததால் பலதரப்பட்ட இன்னலுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.ஏனைய அரச தொழிலுக்கான நேரங்கள் கைவிரல் அடையாளம் இடும் விடயங்கள் 9மணிவரையும் இருக்கின்ற சூழலில் காலை 7.30 மணிக்குமுதல் கடமைகளை நிறேவேற்ற முடியாததே பிரச்சினைகளாகும்.

ஒருபெண் எழும்பும் நேரத்திலிருந்து பாடசாலைக்குச் சென்று கைவிரல் அடையாளம் இடும்நேரத்திற்கிடையில் பம்பரமாக சுழல்கின்றாள். இந்த அவசர நிலையில் ஏற்படும் பதட்டத்திற்கும் அவளது கடமைக்குமிடையில் உள்ளதொடர்பில் முழுத் திருப்தியை வெளிக்கொண்டுவராத ஒரு மனநிலை மாற்றம் மறைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக, ஒருபெண் ஆசிரியருக்கு அதிக வேலைப்பழு காரணத்தால் தனிப்பட்டமுறையில் பாதிக்கப்படுவது அவ்ஆசிரியர் என்பதோடு, கணவனும் தனது பிள்ளைகளும்,குடும்பத்தில் தங்கி வாழும் முதியவர்களும் நேரடியாக பாதிக்கப்படுகின்றார்கள். இத்தோடு மாணவர்களும் என்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இதற்கான அடிப்படைக் காரணங்கள் 75வீதம் இதில் ஆசிரியருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இது ஆய்வு ஊடாக அறியக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, திருமணம் செய்த பெண் ஆசிரியர் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து முதலாவது தனது கடமைகளை முடித்து, கணவனுக்கானகடமைகள், குழந்தைகளுக்கான தேவைகள் பெற்றோருக்கான தேவைகள், மாமா,மாமி ஆகியோரின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் முடித்து தனது சேவைகளைச் செய்வதற்காக பேருந்தில் அவசர அவசரமாக பயணம் செய்து,சிலர் மோட்டார் சைக்கிளில் பதட்ட நிலையில் பாடசாலைக்குச் சென்று தனது விரல் அடையாளத்தை நேரத்திற்கு உறுதிப்படுத்த வேண்டும். இத்தோடு, இந்த மனநிலையில் மாணவர்களுக்குரிய கற்றல்,கற்பித்தல் உரிய முறையில் செயற்படுத்த வேண்டும். இது இந்தச் சூழலில் குறிப்பாக,பல பெண்ஆசிரியர்கள் நல்ல மனநிலையில் செயற்படுவார்களா? எனும் கேள்வி தொக்கி நிற்கின்றது.

மேலத்தேச நாடுகளைப் போல் கலாசார முறையில் எமது ஆசிரியர்கள் பின்பற்ற முடியாது. காரணம் எமது சமூகம் பின்பற்றுகின்ற ஒழுக்க கலாசாரவிழுமியங்கள் இதற்கு இடம் தரமாட்டாது. குறிப்பிட்ட சில பெண் ஆசிரியர்களைத் தவிர 75வீதத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பெண் ஆசிரியர்கள். அதிகாலை நான்கு மணி தொடக்கம் காலை எட்டுமணி வரையும் ஒரு ஆரோக்கியமான மனநிலையில் மகிழ்ச்சியாக இருந்தாலும் இந் நேரத்தில் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பழுக்கள், சுமைகள் ஆசிரியர்களை வாட்டி வதைப்பதென்பதை எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

சமூக கலாசார விழுமியங்களுக்கு கட்டுப்பட்ட முறையில் பெண்களுக்கு பல வரப்பிரசாதங்கள் உடைய இந்த நாட்டில் அதிகாலை நான்கு மணி தொடக்கம் எட்டு மணிக்குள் குறிப்பாக, ஆசிரியர் துறையில் அளப்பெரும் சேவையாற்றுகின்ற குடும்பச்சுமையை தாங்கி நின்று மாணவர் சமூகத்திற்கு விடாமுயற்சியுடன் உழைக்கின்ற பெண்ஆசிரியர்கள் காலைவிரல் அடையாளம் பதிக்கின்ற விடயத்தில் அரசாங்கம் ஒருமாற்றீடான சுற்றுநிருபத்தைக் கொண்டு வருவதனூடாக சுமைகளை தாங்கி சேவையாற்றுகின்ற ஆசிரியர்களின் வினைத்திறன் மிக்க சேவைகளை அடைவதனூடாக இன்னும் பல மடங்கு சிறந்த விளைத்திறனை பெற்றுக்கொள்ள முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

குடும்பப் பெண்கள் விடயத்தில் அவர்களுடைய இயற்கைச் சூழலுக்கு ஏற்றாற்போல் பல்லின சமூகப்பெண்கள் வாழுகின்ற இந்த நாட்டில் மதக்கடமைகள்,தனிப்பட்டஉரிமைகள்
அத்தியாசியசேவை செய்யும் பெண்கள் போன்றோர்களுக்கு நேரக்கட்டுப்பாடு இருந்தாலும் சில தளர்வுத்தன்மை காக்கப்படுவது இயல்பானதே. தளவுர்தன்மை காட்டப்படவில்லை என்று சொல்ல வரவில்லை. தளர்வுத்தன்மை இன்மையால் உளவியல் ரீதியாக பாதிப்பில்லை எனகூற முடியாது.

எனவே பெண் ஆசிரியர்களுக்கு குறிப்பாக, திருமணமான ஆசிரியர்களுக்கு கைவிரல் அடையாளம் இடுதல் விடயத்தில் ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருக்கக் கூடியவாறு காலை 7.30 மணி நேரத்தை மாற்றுவதற்குரிய நடவடிக்கையை எடுக்குமாறு மாகாண,மத்தியகல்வி அமைச்சு இவ்விடயத்தை பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். என்றார்.