வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 40ஆயிரம் வீடுகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்காக 40ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

மோதலின் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்ட குறைந்த வருமானங்களை கொண்ட குடும்பங்களின் வீடில்லா பிரச்சனைக்கு அரசாங்கம் நிரந்தர தீர்வை வழங்க முன்வந்துள்ளது.

இதன்கீழ் பாரிய அளவிலான வீடமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் தேவை ஏற்பட்டுள்ளது.

இதற்காக மூட்டு வீடு என்ற தொழில்நுட்பத்தின் கீழ் 65ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்காக இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைக்கு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனடிப்படையில் இதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதற்கு மாற்று நடவடிக்கையாக தேசிய கட்டட ஆய்வு அமைப்பினால் சிபார்சு செய்யப்பட்டுள்ள கொங்கிறீற் பனல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்படும் வீடுகளுக்காக இந்த பிரதேசத்தில் உள்ள மக்களை போன்று அரசியல் பிரதிநிதிகளும் வரவேற்றுள்ளனர். இதற்கமைவாக வடக்கு கிழக்கு பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்ட குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களுக்கு கொங்கிறீற் பனல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 650 சதுர அடியைக்கொண்ட 40 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு , வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சமர்ப்பித்தஆவணக்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.