மட்டக்களப்பில் வறுமையை ஒழிக்கும் திட்டம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் 46 கோடி ரூபா நிதியுதவியில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய ஸ்தாபனத்தின் உணவு விவசாய நிறுவனத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாயத்தினூடாக வறுமையை ஒழிக்கும் அபிவிருத்தி திட்டத்தின் முன்னேற்றங்களை பகிர்ந்து கொள்ளும் விசேட நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு ஈஸ்ட் லங்கா சுற்றுலா விடுதியில் நேற்று இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இத்திட்டத்துடன் சார்ந்த அரச திணைக்களங்கள் பிரதேச செயலாளர்கள், இத்திட்டத்தில் பயன் அடைந்த பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த ஐந்து வருடமாக அமுல்படுத்தப்பட்ட இந்த விசேட திட்டத்தில் விவசாயம், கால்நடை உற்பத்தி, நன்னீர்மீன் வளர்ப்பு, சிறிய நீர்ப்பாசன அபிவிருத்தி, உட்பட பல துறைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும், வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களில் சுமார் 7000 குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்.

இந்தத் திட்டத்தில் பழப் பயிர்ச்செய்கை, கச்சான் பயிர் உற்பத்தி, விதை நெல் உற்பத்தி, நன்னீர் மீன் வளர்ப்பு உற்பத்தி, சிறிய நீர்ப்பாசன புனருத்தாரணம், கருவாடு உற்பத்தி, உட்பட பல துறைகளில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள மட்டக்களப்பு மாவட்டப் ஊடகப் பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.

இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் உலக விவசாய நிறுவன திட்ட முகாமையாளர் திருமதி ரோகினி சிங்கராயர், கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கபில விக்ரமசிங்க, இந்நிறுவனத்தின் விவசாய அபிவிருத்தி அதிகாரி ஜூட் கிரிசாந், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.