ஓட்டமாவடி திண்மக்கழவு முகாமைத்துவ நிலையத்தை பார்வையிட்ட தவிசாளர்

ஓட்டமாவடி பிரதேச சபையின் கீழ் இயங்கும் சூடுபத்தினசேனைக் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவ நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் சென்று பார்வையிட்டார்.

இதன்போது ஒட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அமிஸ்டீன், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஜீ.அமீர், எம்.பீ.எம்.ஜௌபர், சபையின் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் மற்றும் பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.அக்பர் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

ஓட்டமாவடி பிரதேச சபையினால் சூடுபத்தினசேனைக் கிராமத்தில் திண்மக் கழிவகற்றல் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் சேதனப்பசளை உற்பத்தி நிலையத்தின் மூலம் பசளைகள் உருவாக்கப்படுகின்றது.

இவ்திண்மக் கழிவு முகாமைத்துவத்தின் மூலம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆயிரம் கிலோ கிராம் பசளைகளை தாயாரித்துக் கொள்கின்றனர். இதன் மூலம் பிரதேச சபை வருமானமடைகின்றது.

சூடுபத்திசேனை பகுதியில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் அமைந்துள்ளதால் அப்பகுதியில் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றது.

இங்கு கொட்டப்படும் குப்பைகளில் திண்மக் கழிவுக்கு பயன்படுத்தக் கூடிய குப்பைகளை தெரிவு செய்து விட்டு ஏனைய குப்பைகள் ஓரங்களில் கொட்டப்படுகின்றது. அத்தோடு பாசிக்குடா உல்லாச விடுதிகளின் உணவுக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கடைகளில் எச்சங்கள் என்பனவும் கொட்டப்படுகின்றது.

பாசிக்குடா ஹோட்டல்களில் மீதப்படும் உணவுகளை இங்கு கொட்டுவதால் இதனை உண்பதற்காக யானைகள் அதிகம் வருவதுடன், அண்மித்து காணப்படும் காடுகளில் நிரந்தரமாக வசித்து வருகின்றது. யானைகள் மாலை நேரங்களில் உணவு உண்பதற்கு வருவதால் அதனை அண்டியுள்ள வயல் நிலங்கள், சேனைப் பயிர்கள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புக்களுக்கு சென்று பயிர்களை நாசம் செய்கின்றது.

அத்தோடு சூடுபத்திசேனை பகுதியில் குப்பைகளை கொட்டுவதுடன் ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை பிரிவில் உள்ள இறைச்சிக் கடைகளில் இருந்து பெறப்படும் எச்சங்களையும் அங்கு கொட்டுவதால் அதிலிருந்து வரும் துர்நாற்றத்தால் மக்கள் குடியிருப்பில் வசிக்க முடியாத சூழலும், நிம்மதியாக உணவுகளை உண்ண முடியாத நிலையும் காணப்படுகின்றது.

அந்த வகையில் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவ நிலையத்தின் மூலம் வருமானத்தை மெருகூட்டும் வகையிலும், இங்கு கொட்டப்படும் கழிவுகள் மூலம் மக்கள் பாதிக்கப்படாத வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அமிஸ்டீன் தெரிவித்தார்.