ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது கல்வியின் வளர்ச்சியில் தங்கியுள்ளது – ஸோபா

ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது கல்வியின் வளர்ச்சியில் தான் தங்கியுள்ளது என வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவும், மாணவர் ளெரவிப்பும் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலய மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது அப்பிரதேசத்தின் கல்வி வளர்சியினாலேயே ஏற்படுகின்றது. அந்தவகையில் கல்விச் சமூகத்தின் மாணவர்களை பாராட்டும் நிகழ்வை ஒரு கிராமத்தின் சனசமூக அமைப்பு ஏற்பாடு செய்திருப்பதானது பாரட்டுதற்குரியது.

ஏனெனில் இச்சனசமூக அமைப்பு தம் கிராம மக்களின் கல்வியில் அக்கறை கொண்டமையை இந்நிகழ்வு பறை சாற்றுகின்றது. இப்பாராட்டைப்பெறும் மாணவர்கள் இதனை விளங்கிக் கொண்டு தமது அடுத்தகட்ட உயர்கல்வியை வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும்.

ஏனென்றால் கல்வி கற்றவரே சமூகத்தில் மதிக்கப்படுவர். மனித வாழ்வுக்காலம் குறைவு தான். எனவே அந்த அழகிய வாழ்நாளுக்குள் நாம் கற்க வேண்டியவற்றைக் கற்றால் அதற்கு அழிவில்லை. நாளை நம் தேசத்தை, பிரதேசத்தை, கிராமத்தை அரசியலாலும், கல்வியாலும் ஆழப்போவது நீங்கள் தான்.

அதற்குப் பெற்றோர்கள் அவதானத்துடனும் பொறுப்புணர்சியுடனும் செயற்பட வேண்டும். நவீன தொழினுட்பக் கடலில் பயணிக்கச் செய்வதற்குரிய பயிற்சியை இக் கல்விச் சமூகம் வழங்க வேண்டும். அவர்கள் நவீன தொழினுட்பக் கடலில் மூழ்கிவிடாத படி பார்த்துக் கொள்வது நமது பொறுப்பும் கடமையுமாகும் என்றார்.

திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் தலைவர் திருமதி.பி.மெத்தியஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன், பிரதேச செயலாளர் வ.வாசுதேவன், பிரதேச சபைச் செயலாளர் ஏ.தினேஸ்குமார் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது 2017 இல் சாதாரண தரப் பரீட்சையில் விசேட திறமைகளைக் காட்டிய வாழைச்சேனை, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டது.