இறுதிக்கட்டப்போர் தொடங்கிய கிழக்கு மாகாணம் பற்றி விக்னேஸ்வரனுக்கு ஏதாவது தெரியுமா?

ப. தெய்வீகன்

மனிதப்பேரவலம் ஒன்றை நினைவு கூரும் இடத்தில் இன்னொரு பேரவலத்தை அரங்கேற்றும் “வல்லமை” தமிழர்களுக்கு மாத்திரம்தான் உண்டு என்பதை உலகெங்கும் பறை சாற்றும் வகையில் முள்ளிவாய்க்காலில் சென்று களமாடிவிட்டு வந்திருக்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன். அவருக்கு பெரியதொரு ஒளிவட்டத்தை கீறி – நினைவு மேடையில் ஏற்றிவைத்தது மாத்திரமல்லாமல் – அவரது சாவு வீட்டு அரசியலுக்கு சாமரம் வீசிவிட்டு வந்திருக்கிறார்கள் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்.

இந்தப்பேரவல நினைவுநாளுக்கு திரளும் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக விக்னேஸ்வரன் அடுத்த வருடம் அரசாங்கம் கொடுத்த – தனது முதலமைச்சர் – வாகனத்துக்கு முன்பாக துலா ஒன்றைக்கட்டி தூக்குக்காவடி எடுத்துக்கொண்டால்கூட ஆச்சரியப்படுதவதற்கில்லை போலிருக்கிறது.

இவ்வளவு துரிதமாக தமிழர்களின் அரசியல் தறிகெட்டு பயணிக்கும் என்று யாரும் நம்பவில்லைத்தான். ஆனாலும் வரலாறு அதனை சாத்தியமாக்கிக்கொண்டு செல்கிறது என்பதை கண் முன்னே பார்க்கும்போது விரக்தியும் கோபமும்தான் எஞ்சுகிறது.

அன்று மாவீரர்களுக்கு விளக்கேற்றவேண்டும் என்று சிறிதரன் ஏறிநின்றது போல நேற்று இறந்த பொதுமக்களுக்கு விளக்கேற்றுவதற்கு தனக்கு கிடைத்த ஒரு லட்சம் வாக்குகளை அத்தாட்சியாக காண்பித்துக்கொண்டு வந்து நிற்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன். இந்த விளக்கேற்றும் நிகழ்வுகள் எல்லாம் தனது அரசியலுக்கு மிகவும் முக்கியமானது என்றும் அதனை குழப்பிவிடவேண்டாம் என்று கையெடுத்து கும்பிடாத குறையாகவும் அவர் முள்ளிவாய்க்காலில் போய் நின்ற கோலம் பரிதாபத்திலும் பரிதாபமாக கிடந்தது.

போர் முடிந்து ஒன்பதாண்டுகளில் அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் உச்ச நிலைக்கு கொண்டு சென்றுவிட்டதுபோலவும் அந்த முழுச்சாதனையையும் செய்துமுடித்துவிட்ட பெருமை மிக்க அரசியல்புள்ளி தான்தான் என்பது போலவும் இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கவேண்டும் என்று எந்த கூச்ச நாச்சமும் இல்லாமல் வந்து நிற்கின்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனின் மனசாட்சியை எண்ணும்போது பயங்கர வியப்பாக இருந்தது.

அப்படியே அவர் நினைப்பதுபோல மாகாணசபைதான் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது என்று முடிவெடுத்துக்கொண்டாலும் இறுதிக்கட்டப்போர் தொடங்கிய கிழக்கு மாகாணம் பற்றி விக்னேஸ்வரனுக்கு ஏதாவது தெரியுமா? அங்குள்ளவர்கள் எவரையாவது இந்த நினைவேந்தல் நிகழ்வில் வந்து நிற்க அனுமதித்தாரா? அல்லது அவர்களையும் துரத்திவிட்டுத்தான் தான் மட்டும் உள்ளே வந்து நின்றாரா?

கடன்காரன் இறந்துவிட்டதால் அவனுக்கு கடன்கொடுத்த வங்கிக்காரன் வந்து பிணத்துக்கு கொள்ளி வைக்க உரிமை கோருவது போலிருந்தது விக்னேஸ்வரன் போட்ட கூத்து. தான்தான் மக்களின் பிரதிநிதி என்று கூறிக்கொண்டு வணக்கம் செலுத்தவதற்கு வந்து தீபத்தோடு நின்றது, இவ்வளவு காலத்தில் தமிழினம் கண்ட மிகப்பெரிய சாபக்கேடான காட்சி அன்றி வேறொன்றுமில்லை.

பாவம் பல்கலைக்கழக மாணவர்கள். இந்த அற்ப அரசியல் மேடைக்கும் அரசியல்வாதிக்கும் துதிபாடுகின்ற துர்பாக்கிய நிலைக்குள் தங்களை தாங்களே தள்ளிவிட்டிருக்கிறார்கள். இம்மியும் கூச்சமில்லாமல் ஒரு நினைவேந்தல் நிகழ்வினை அரசியல் மேடையாக்கிச்சென்ற சம்பந்தன் ஐயாவின் “க்ளோனிங்” அரசியல்வாதியை பார்த்து புளகாங்கிதமடைந்துபோயிருக்கிறார்கள். அவரை அணைக்கவேண்டும் என்பதற்காக முன்னாள் போராளி துளசியைக்கூட முட்டி தள்ளிவிடுகிறார்கள். கறுப்பு உடை தரித்து காமடி படைகளாக எழுந்தருளுகிறார்கள். முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்தை நடத்திய புலிகளே காண்பிக்காத வீரத்தை தாங்கள் புதிதாக காண்பித்துவிடப்போவதுபோல விக்னேஸ்வரனை சூழ விறைத்தபடி நின்று சிரிப்பு காட்டுகிறார்கள்.

புலத்திலிருந்து பல கோஷ்டிகள் இந்த புதிய போர் பரணியை பார்த்து கண்ணில் ஒற்றிக்கொள்கிறார்கள். விடுதலைப்புலிகளின் அடுத்த படையணி தயார் என்று உள்ளங்கையில் குத்திக்கொள்கிறார்கள். அங்கு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தியது மோட்டார் சைக்கிள் பேரணி என்றாலும் அதனை இங்கிருந்து குட்டிசிறி மோட்டார் படையணி போல பயபக்தியோடு பார்த்து பரவசம் கொள்கிறார்கள். போராட்ட காலத்திலும் அதற்கு பின்னரும் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் அவர்களது போராட்ட பங்களிப்புக்களுக்காக வீதி வீதியாக சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டு எறியப்படும்போது இரண்டு கால்களுக்கும் இடையில் கைகளை வைத்துக்கொண்டு நடுங்கிக்கொண்டிருந்த இந்த புலம்பெயர்ந்த புடுங்கிகளுக்கு பல்கலைக்கழக மாணவர்களின் தற்போதைய திரட்சி போதையேற்றிவிட்டிருக்கிறது. எப்படியாவது, இவர்களை துருப்புச்சீட்டாக வைத்து தாங்கள் விரும்புகின்ற ஒரு அரசியலை நடத்திவிடவேண்டும் என்று பர பரத்துக்கொண்டு நிற்கிறார்கள்.

காலம் எவ்வளவு வேகமாக சுழன்று வந்து ஒரு சூனியத்தில் குத்திக்கொண்டு நிற்கிறது என்பதை பார்க்கும்போது விரக்தி மட்டுமே எஞ்சுகிறது.