புத்தக சுமைகளை தொடர்ச்சியாக கூலித்தொழிலாளர்கள் போல் பாடசாலை மாணவர்கள் சுமக்கின்றனர்.

(படுவான் பாலகன்) பாடசாலைகளில் ஓடி, ஆடி விளையாடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தொடர்ச்சியாக உட்காந்து இருப்பது, புத்தக சுமைகளை தொடர்ச்சியாக கூலித்தொழிலாளர்கள் போல் பாடசாலை மாணவர்கள் சுமக்கின்றனர். இவைகள் அவர்களது இருதயத்தினைப் பாதிக்கின்றது.என கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் சி.ஜெயசங்கர் தெரிவித்தார்.

 

முனைக்காடு நாகசக்தி கலைமன்றத்தின் ஏற்பாட்டில் புதிதாக பழக்கப்பட்ட சாத்தியவான் சாவித்திரி தென்மோடிக்கூத்து அரங்கேற்ற நிகழ்வு இரவு(18) நடைபெற்ற போது, ஆரம்பநிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

பணிப்பாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அதிகாரத்தில் உள்ளவர்கள், பாடதினக்குறிப்பு, பாடவேலைத்திட்டங்களை எழுதுமாறு ஆசிரியர்களை அதிகாரம் செய்ததினால், மகிழ்ச்சியான கற்றலுக்கும் கற்பித்தலுக்குமான சூழலை எங்களது பாடசாலைகள் உருவாக்கவில்லை.

பரீட்சைகளில் தோற்றி வெற்றி பெறுவதற்காக, அதுசார்ந்த விடயங்களை மனப்பாடம் செய்துகொண்டு, சித்தியடைகின்றவர்களையே நாம் கொண்டாடுகின்றோம். இத்தகைய கல்விக்கொள்கைகளுக்குள்ளால் ஆளுமைமிக்க எதிர்கால தலைமுறையை உருவாக்க முடியாது. இருதய நோய் சிகிச்சை நிபுணர்களிடம் அதிகம் செல்கின்ற நோயாளர்களாக பாடசாலை மாணவர்களே உள்ளனர் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்காக பாடசாலைகளில் கூத்துச்செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டுமென்றும் எங்களிடம் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். ஏனெனில் பாடசாலைகளில் ஓடி, ஆடி விளையாடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தொடர்ச்சியாக உட்காந்து இருப்பது, புத்தக சுமைகளை தொடர்ச்சியாக கூலித்தொழிலாளர்கள் போல் பாடசாலை மாணவர்கள் சுமக்கின்றனர். இவைகள் அவர்களது இருதயத்தினைப் பாதிக்கின்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக, போட்டிப்பரீட்சை, மாணவர்களது உளநலனினை பாதிப்பதாகவுள்ளது. இக்கல்வி முறைக்குள்ளால் சித்திபெறுகின்றவர்கள் எதையும் சாதிக்க, கண்டுபிடிக்க முடியாதவர்கள். ஒரு அரச நிர்வாகத்தினை நடாத்த முடியாதவர்கள். பட்டதாரிகளும் வேலைத்தளங்களில் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளும் இவற்றினது தொடர்ச்சிதான், செயல்மைய, ஆளுமைமிக்க கற்பித்தலை பர்டசாலைகளோ, பல்கலைக்கழகங்களோ நிகழ்த்தவில்லை. மாறாக பரீட்சைக்கு தயார்படுத்தல், பரீட்சைக்கு தயாராதல், உயர்சித்தி பெற்றவர்களைப் பாராட்டுதல் என்கின்ற கல்விக்கும், அறிவிக்கும் மாறான விடயத்தினையே நாங்கள் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம்.
ஒரு சமூகத்தில் வாழ்கின்ற சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இயல்பாக மகிழ்ந்து, கலந்துரையாடி கலையைப் பயின்று ஒவ்வொரு ஒவ்வொருவருடமிருந்து, பல தலைமுறைகளிடமிருந்து பயின்று ஒரு பொதுவெளியில் கூடி கற்கின்ற சாமாந்தர கல்வி முறையாக கூத்துக்கலை இருந்துகொண்டிருக்கின்றது. இதற்கூடாக உருவாகின்ற தலைமுறையினர். செயல்திறன்மிக்க, முகாமைத்துவமிக்க தலைமுறையினராக உருவாகிக் கொண்டிருக்கின்றனர். களரியைக், தோரணத்தைக் கட்டுவது, அழகியல் வெளிப்பாடுமட்டுமல்ல அதனை சிந்தித்து திட்டமிட்டு வேலை செய்வதென்பது, ஒரு சாதாரணவிடயமல்ல. ஒரு களரியை கட்டுவதுதென்பதும் தனி ஒருவரின் உழைப்பல்ல. சிந்தனை, கணிப்பீட்டு திறன் இணைந்த வெளிப்பாடு. எனவே பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் மகிழ்ச்சிகரமான செயல்மைய கல்வியை கொண்டுவர வேண்டும். என்றார்.