உறவுகளை அழித்த அரசாங்கத்திற்கு தண்டனை வழங்க இறைவன் துணைபுரிய வேண்டும்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு தின அனுஷ்டிப்பு கிரான் விஸ்ணு ஆலயத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட போது உறவுகளை நினைத்து கதறியழுதது மக்களின் மனதை நெகிழ வைத்துள்ளது.

முள்ளிவாய்காலில் உயிர் நீத்த உறவுகளின் ஆத்மா சாந்திவேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தலில் கலந்து கொண்ட உறவினர்கள் உயிர் நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், உறவுகளை நினைத்து கண்ணீர் விட்டு அழும் காட்சி கலந்து கொண்டவர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது.

அத்தோடு எமது உறவுகளை அழித்த அரசாங்கத்திற்கு தண்டனை வழங்குவதற்கு இறைவன் துணை புரிய வேண்டுமென வேண்டிய ஆலய முன்றலில் கதறியழுததை பார்வையிட்ட அனைவருக்கும் கண்ணில் இருந்து நீர் வந்துள்ளமையை காணக்கூடியதாக இருந்தது.

தமிழினப் படுகொலை நாளான மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி கிரான் விஸ்ணு ஆலயத்தில் கூட்டு பிரார்த்தனை மற்றும் விஷேட பூஜை என்பன இடம்பெற்றதுடன், முள்ளிவாய்காலில் உயிர் நீத்த எமது உறவுகளின் நினைவாக ஆலய முன்றலில் தீபச்சுடர் ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை தமிழரசுக் கட்சி செயலாளர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.