தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிரானில் நினைவு தினம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு தின அனுஷ்டிப்பு கிரான் விஸ்ணு ஆலயத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழினப் படுகொலை நாளான மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி கிரான் விஸ்ணு ஆலயத்தில் பஜனைகள் மற்றும் நண்பகல் விஷேட பூஜை என்பன இடம்பெற்றதுடன், முள்ளிவாய்காலில் உயிர் நீத்த எமது உறவுகளின் நினைவாக ஆலய முன்றலில் தீபச்சுடர் ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பின்ரகளான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், சா.வியாளேந்திரன், இலங்கை தமிழரசுக் கட்சி செயலாளர் கி.துரைராஜசிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, எஸ்.ஜெயானந்தமூர்;த்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

முள்ளிவாய்காலில் உயிர் நீத்த உறவுகளின் ஆத்மா சாந்திவேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தலில் கலந்து கொண்ட உறவினர்கள் உயிர் நீத்தவர்களை நினைத்து கதறியழுதமை குறிப்பிடத்தக்கதுடன், தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு வேண்டியும் இதன்போது இறைவணக்கம் செலுத்தப்பட்டது.