கிண்ணையடியில் உயிர் நீர்த்தவர்களுக்கு பிதிர்க்கடன் செலுத்தப்பட்டது

கோறளைப்பற்று வாழ் பொதுமக்களின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு தின அனுஷ்டிப்பு வாழைச்சேனை கிண்ணையடியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழினப் படுகொலை நாளான மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் காலை 9 மணிக்கு உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி கிண்ணையடி ஆற்றங்கரை முற்றத்தில் பிதிர்க்கடன் செலுத்தப்பட்டு ஆற்றில் பின்டங்கள் கரைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கிண்ணையடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் நண்பகல் விஷேட பூஜை என்பன ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.எஸ்.நந்தகுமார் சர்மா குருக்களினால் இடம்பெற்றதுடன், முள்ளிவாய்காலில் உயிர் நீத்த எமது உறவுகளின் நினைவாக ஆலய முன்றலில் தீபச்சுடர் ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன், கி.சேயோன் மற்றும் கோறளைப்பற்று வாழ் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

முள்ளிவாய்காலில் உயிர் நீத்த உறவுகளின் ஆத்மா சாந்திவேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட உணர்வு பூர்வமான நினைவேந்தலில் இன, மத வேறுபாடுகளின்றி மக்கள் கலந்து கொண்டதுடன், உயிர் நீத்தவர்களை நினைத்து உறவினர்கள் கதறியழுதமை குறிப்படத்தக்கது.