ஶ்ரீநேசனின் முயற்சியால் மட்டக்களப்புக்கு அரச ஒசுசல மருந்தகங்கள்

ஸ்ரீநேசனின் முயற்சியால் மட்டு மாவட்டத்துக்கு ‘அரச ஒசுசல மருந்தகங்கள்
கிழக்கு மாகாணத்தில் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாக பாராளுமன்றத்திலும் சுகாதார அமைச்சின் கூட்டங்களிலும், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அடிக்கடி வலியுறுத்தி வந்தார்.இதற்கமைய கடந்த 11.05.2018 அன்று சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் இவ்விடயம் தொடர்பாக காராசாரமான விவாதம் இடம்பெற்றிருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ‘அரச ஒசுசல’ மருந்தகங்களை அமைப்பது தொடர்பாகவும் அங்கு பேசப்பட்டது. கௌரவ சுகாதார அமைச்சர் ராஜித சேனரெட்ன அவர்கள், கிழக்கு மாகாணத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள சுகாதார சேவைகள் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
சுகாதார அமைச்சர் அவர்கள் உறுதியளித்தபடி மட்டக்களப்பு மாவட்டத்தில் ‘அரச ஒசுசல’ மருந்தகங்களை அமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்கும் பொருத்தமான கட்டடங்களை அடையாளம் காண்பதற்காகவும் அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.
அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்களது பணிக்குழுவினர், மட்டக்களப்பு மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய இடங்களில் ஏற்கனவே அடையாளம் கண்டிருந்த இடங்களை பார்வையிட்டனர். களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் கட்டட வசதிகளை பார்வையிடுவதற்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர்.வைத்தியர் சுகுணன் அவர்களின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட்டது.