வாழ்வாதாரத்திற்காக இழந்த காணியை மீட்கப் போராடும் கோமாரி பிரதேச விவசாயிகள்

செ.துஜியந்தன்

“காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும் – அங்கு
தூணில் அழகியதாய் – நன் மாடங்கள்
துய்ய நிறத்தினால் -அந்தக்
காணி நிலத்திடையே – ஓர் மாளிகை
கட்டித்தர வேண்டும் -அங்கு
கேணி அருகினிலே தென்னை
மரக் கீற்றும் இள நீரும்”
என்று பாரதியார் பாடினார். பாரதியாரின் அந்தக் கனவு மெய்ப்பட்டதோ என்னவோ நானறியேன். ஆனால் வடக்கு கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்கள் தங்களுடைய சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரியும், பறி போகும் காணிகளை மீட்கும் போராட்டத்திலும் அன்று தொடக்கம் இன்று வரை ஈடுபட்டுவருகின்றார்கள்.
கடந்தகால யுத்தத்தில் உயிர் உடமைகளை இழந்து நிர்க்கதிக்குள்ளான மக்களுக்கு தாங்கள் வாழ்ந்த சொந்த நிலத்தில் குடியேறி நிம்மதியாக ஒரு பிடிச்சோறு சாப்பிடக்கூட முடியாத துர்ப்பாக்கிய நிலையிலேயுள்ளனர். என்று தணியும் இந்த ஏக்கம் என்று இலவு காத்த கிளிபோல தங்கள் காணிகளை மீட்கப் போராடிவரும் தமிழ் மக்களின் கண்ணீரைத்துடைப்பதற்க்கு நல்லாட்சி அரசாங்கம் கூட நடவடிக்கை எடுக்கவில்லை. கத்திக் கத்தித் தொண்டைத்தண்ணீ வற்றிவிட்ட நிலையிலே அப்பாவி தமிழ் மக்கள் உள்ளனர்.
அரசியல் கைதிகளை மீட்கப்போராட்டம், காணமால் போனவர்களை கண்டு பிடிக்கப்போராட்டம், காணிகளை மீட்கப்போராட்டம், வீடு கேட்டுப்போராட்டம், வாழ்வாதாரத்தை வளப்படுத்த போராட்டம் என ஒவ்வொன்றுக்கும் போராடிப்பெற வேண்டிய நிலையிலே தமிழர்கள் இருக்கின்றனர் என்பது எவ்வளவு வேதனையான விடயமாகும். தொடர்ச்சியாக தமிழ் மக்கள் ஒரு போராட்டம் நிறைந்த சூழலுக்குள்ளே இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுத்தந்தது என்ற கேள்வி எழுகின்றது. இந்த அரசாங்கம் தமது அரசுக்குள் எழுகின்ற உள் முரண்பாடுகளையும், ஊழல் வாதிகளையும் பாதுகாப்பதிலும், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்வதிலுமே இதுவரை காலமும் காலத்தைக் கடத்தியுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இறுதியாக பத்து அம்சக்கோரிக்கையை முன் வைத்து அக் கோரிக்கையினை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதத்தினை பிரதமரிடம் எழுத்து மூலம் பெற்றிருப்பதாகவும் இதனாலே நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் கூட்டமைப்பினர் கூறுகின்றனர். இனியுள்ள ஆட்சிக் காலத்திலாவது தமிழ் மக்களின் துயர்கள் களைப்படவேண்டும்.

தற்போது கூட தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் திட்டமிட்ட காணி அபகரிப்புக்கள் மிகவும் சூட்சுமமான முறையில் இடம் பெற்றுவருகின்றது. தொல் பொருள் ஆராச்சி என்ற போர்வையிலும், வனவிலங்கு ஜீவராசிகள் திணைக்களத்திற்குரிய காணிகள் என்ற போர்வையிலும் தமிழர்களின் பூர்விக நிலங்கள் பறிக்கப்பட்டுவருகின்ற செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணNயுள்ளது. தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலத்தை எங்கிருந்தோ வந்தவர்கள் அத்துமீறிப் பிடித்துக்கொண்டு அல்லது ஆக்கிரமித்துக் கொண்டு அக் காணிகளுக்குள் நுழையவேண்டாம் என அதிகாரத்தோரணையில் கட்டளையிட்டுச் செல்கின்றனர். இது எந்த வகையில் நியாயமானதாகும்?

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ளது கோமாரிக் கிராமம். இக் கிராமத்திலுள்ள தமிழ் மக்களினால் காலங்காலமாக மேட்டு நிலப்பயிர்ச் செய்கை செய்யப்பட்டுவந்த 320 ஏக்கர் காணியினை திடீரென வனவிலங்கு ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் கடந்த வருடம் தமக்குரிய காணிகளாக அடையாளப்படுத்தி எல்லைக் கற்களை இட்டுள்ளனர். அத்துடன் அக்காணிகளுக்குள் அத்து மீறி உள் நுழைந்தால் சட்ட நடவடிக்கைஎடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவந்த விவசாயிகள் தமது வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

மிக நீண்ட காலமாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட மக்களின் விவசாய மற்றும் மேட்டுநிலக்காணியினை வனவிலங்கு ஜீவராசிகள் திணைக்களம் எல்லைக்கற்களை நாட்டி அங்கிருந்து மக்களை விரட்டியடித்துள்ளது. தமக்கு நேர்ந்த அநீதி தொடர்பில் அம் மக்கள் பலரிடம் முறையிட்டும் இது வரை எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை என விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் எம்.துரைரெத்தினம் கூறுகையில்….
எங்களது கோமாரிக் கிராமம் கடந்த முப்பத்தைந்து வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த கிராமமாகும். எமது கிராமத்தை அண்டிய பகுதிகளான கந்தன்குளம், சமுளன்சோலை, மணிசகுடம்வட்டை, நிழல் பாலையடிவட்டை, முருங்கன்தனைவட்டை, சாளம்பைவட்டை, 60 ஆம் கட்டை ஆகிய இடங்களில் சேனைப்பயிர்ச் செய்கை மற்றும் விவசாயம் ஆகியவற்றைச் செய்து கொண்டு வாழ்ந்தனர். அப்படியிருந்த மக்களை கடந்தகால யுத்தத்தை காரணம் காட்டி இராணுவத்தினரால் அம் மக்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். அங்கிருந்து வெளியேறிய மக்கள் கோமாரியில் குடியேறினார்கள். சொந்த நிலத்தில் பயிர் செய்து பட்டினியின்றி இருந்த இம் மக்களின் வாழ்கை துன்பத்திலே கழிந்தது. காடுகளில் விறகு வெட்டியும். கூலித்தொழில் செய்தும் அன்றாடம் சாப்பாட்டுக்கே கஸ்டப்பட்டார்கள். இன்று யுத்தம் முடிந்த பிற்பாடு மீண்டும் தமது பூர்விக காணிகளுக்குச் சென்று காடுவெட்டி சேனைப்பயிர்ச் செய்கையினை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் திடீரென இங்கு வந்து இதுதமக்குரிய காணிகள் எனவும். இதிலிருந்து வெளியேறுமாறும் இதற்குள் எவரும் அத்துமீறி நுழையக்கூடாது என்று சொல்லி முந்நூற்றி இருபது ஏக்கருக்கு மேல் பிடித்து எல்லைக் கற்களை நாட்டிவிட்டுச் சென்றுள்ளனர். மக்களுக்குரிய இக் காணிகளை வனவிலங்கு திணைக்களம் எப்படி தமக்குரிய காணிகள் என்று கூறமுடியும். காலங்காலமாக இங்கு பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுவந்த மக்களுள்ளனர். அவர்கள் அக்காணிகளுக்கு வரிகட்டிய அத்தாட்சிகளையும் பேமிட்களையும் வைத்திருக்கின்றார்கள். ஏற்கனவே யுத்த்தினால் பாதிக்கப்பட்ட இம் மக்களின் வாழ்க்கை மிகவும் கஸ்டத்திலுள்ள இந் நிலையில் அவர்களது வாழ்வாதாரத்தை மேற்கொள்ளும் காணியையும் பறித்தால் அம் மக்கள் நடுத்தெருவில்தான் நிற்கின்றார்கள். அந்த காணிகள் இல்லாவிட்டால் வாழ்க்கையே அவர்களுக்கு இல்லை என்றாகிவிட்டது. சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கும் சென்றுள்ளனர்.வனவிலங்கு திணைக்களம் அபகரித்துள்ள அக்காணியினை மீட்டுத்தர அனைவரும் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றார்.
விவசாயியான செ.யோகேஸ்வரன் கூறுகையில்….
“ எங்கட அப்பாட அப்பா இங்க விவசாயம் செய்து வந்த பூமி.; 1970 ஆம் ஆண்டு செய்த பூமி பலாமரம், தென்னமரம், தோடமரம் எல்லாம் வைச்சி நல்லா காச்ச பூமி இது. இந்தக் காணிக்கு 1980 ஆம் ஆண்டு பேமிட் தந்தவங்க அதற்கான ஆதாரம் எல்லாம் வைச்சிருக்கன். பிரதேச சபையில காணிக்குரிய வரி கட்டிவாற பற்றுச் சீட்டும் இருக்குது. வனவிலங்கு ஆட்கள் வந்து இது எங்களுக்குரிய காணி நீங்க இங்க வறக்கூடாது எண்டு சொன்னா நாங்க என்ன செய்யிறது. யுhரிட நிலத்துக்கு யார்வந்து சொந்தம் கொண்டாடுவது. நூன் வெள்ளாமச் செய்து வரம்பு கட்டின தடம் எல்லாம் இப்பவும் இங்கயிருக்குது. எங்கட காணியை எங்களிட்ட தரவேணும். இனியும் இருக்கிறத எல்லாம் இழக்கிறத்துக்கு நாங்க தயாரில்ல” என்றார்
இவரைப்போலவே இங்கு காணிகளை பறிகொடுத்தோர் ஒவ்வொரு கதைகளை கூறினார்கள்.
கோமாரி கிராம மக்களின் வாழ்வாதாரத்தின் மூச்சாக இருக்கும் மேட்டு நிலப்பயிர்ச் செய்கைக்கான 320 ஏக்கர் காணிகளை வனவிலங்கு ஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்து பெற்று மீண்டும் அப்பாவி விவசாய மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமது காணி தமக்கு வேண்டும் என போராடிவரும் கோமாரி விவசாயிகளினது போராட்டம் வெற்றிபெறுமா? எமது அரசியல்வாதிகள் இதனைப் பெற்றுக்கொடுப்பதற்க்கு ஆவணம் செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.