மாநகர உறுப்பினர்கள், உத்தியோகத்தர்களின் சிறந்த செயற்பாட்டின் மூலமே அதியுச்ச பயனைப் பெறமுடியும்…

(மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான்)

வெறுமனே திட்டங்களை மேற்கொள்வது வெற்றியை அளிக்காது. அதில் எமது உறுப்பினர்கள் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் மிகவும் முக்கியம். அவர்களின் செயற்பாடுகள் மூலமே இந்த சபையின் அதியுச்ச பயனைப் பெறமுடியும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவான் தெரிவித்தார்.

ஆசியா மன்றத்தின் (Asia Foundation)  அனுசரணையுடன் இன்றைய தினம் (17) இடம்பெற்ற மாநகரசபை நிதி முகாமைத்துவம் மற்றும் திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பான மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு நிறுவனத்தின் செயற்பாட்டில் அரச நிதி மூலம் மாத்திரம் திருப்தியான செயற்பாட்டை அடைந்து விட முடியாது. குறைந்த நிதி ஒதுக்கீடுகள் மூலம் திறன்விருத்திச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தவதென்பது மிகவும் கடினம். எமது பிரதேசங்களில் யுத்த காலங்களில் அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலமாகவே பல்வேறு அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதார செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அக்காலத்தில் பல செயற்பாடுகளுக்கு மிகவும் உறுதுணையாக நின்று செயற்பட்டது இவ்வாறான அரசார்பற்ற நிறுவனங்களே.

அந்த வகையில் ஆசியா மன்றம் அரச நிறுவனங்களின் திறன்விருத்திச் செயற்பாடுகளில் ஈடுபடுவதும், குறிப்பாக அவர்கள் எமது மட்டக்களப்பு மாநகரசபையுடன் இணைந்து செயற்படுகின்றமையும் வரவேற்கத்தக்கது. இவ்வாறான செயலமர்வுகள் மூலம் எமது மாநகரசபையுடன் எதிர்காலத்தில் எவ்வாறான செயற்பாடுகளை ஆசியா மன்றம் மேற்கொள்ளவிருக்கின்றது, அதில் எமது பங்களிப்பு என்ன என்பது பற்றி எமது உறுப்பினர்கள் அறிந்து செயலாற்ற வேண்டும். வெறுமனே திட்டங்களை மேற்கொள்வது வெற்றியை அளிக்காது. அதில் எமது உறுப்பினர்கள் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் என்ன என்பதை அறிதல் வேண்டும். அவர்களின் செயற்பாடுகள் மூலமே இந்த சபையின் அதியுச்ச பயனைப் பெறலாம். அந்தவகையில் இச்செயலமர்வு மூலம் முழுமையான விடயங்களை அறிந்து இந்த மாநகரசபைச் செயற்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதோடு. எமது மாநகரம் முதண்மை மாநகரம் என்னும் எமது இலக்கிற்கு அனைவரும் ஒன்றுசேர பயணிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.