இன்று வெள்ளிக்கிழமை 46வது வருடமாக கதிர்காமத்திற்கான பாதயாத்திரை யாழ்.சந்நதியில்  ஆரம்பம்!

காரைதீவு  நிருபர் சகா
 
வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காமத்திற்கான பாதயாத்திரை 46வது வருடமாக இன்று(17) வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணம் செல்வச்சந்நதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.
 
54நாட்கள் 98ஆலயங்களை தரிசித்து 850கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கவுள்ள இப்பாதயாத்திரைக்கு உலக சைவத்திருச்சபையின் இலங்கைக்கான கிழக்குமாகாண இணைப்பாளரும் ஸ்ரீ நந்தவனப்பிள்ளையார் கதிர்காம பாதயாத்திரைக்குழுவின் தலைவருமான வேல்சாமி மகேஸ்வரன் தலைமைதாங்குகின்றார்.
 
1972ஆம் ஆண்டு அமெரிக்க துறவி பற்றிக்ஹரிகனால் இந்நீண்ட பாதயாத்திரை ஆரம்பித்துவைக்கப்பட்டது. தொடர்ந்து 2007 இலிருந்து காரைதீவைச்சேர்ந்த வேல்சாமி மகேஸ்வரனுக்கு வேலை வழங்கி அவரது பயணத்தை தொடருமாறு பற்றிக்ஹரிகன் வேண்டிக்கொண்டார்.
 
அதற்கிணங்க வேல்சாமி மகேஸ்வரன் தலைமையில் 2007 தொடக்கம் இப்பாதயாத்திரை நடைபெற்றுவருகின்றது. அன்று நாட்டின் அசாதாரண சூழ்நிலைகாரணமாக இப்பாதயாத்திரை வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி  ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியிருந்தது.
 
எனினும் யுத்தம் மௌனித்ததன்பிற்பாடு 2012இலிருந்து யாழ்ப்பாணம் செல்வச்சந்நதி ஆலயத்திலிருந்து இப்பாதயாத்திரை ஆரம்பமாகி கடந்த 6வருடங்களாக நடைபெற்றுவந்தது.
 
இம்முறை பாதயாத்திரை  7வது தடவையாக வேல்சாமி தலைமையில் யாழ்ப்பாணம் செல்வச்சந்நதி ஆலயத்திலிருந்து இன்று மே.17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.