காரைதீவு எல்லைக்குள் உள்ள வயற்காணிகளின் நிருவாகம் சாய்ந்தமருதிற்கா?

ஒருபோதும் அனுமதிக்கமுடியாது என்று குரலெழுப்பிய பிரதேசசபை உறுப்பினர்கள்!
(காரைதீவு  சகா)
 
காரைதீவு எல்லைக்குள் உள்ள வயற்காணிகளின் நிருவாகம் சாய்ந்தமருதிற்குள் வருகிறதா? எமது பாரம்பரிய நிலங்களை சாய்ந்தமருது பெரும்பாக உத்தியோகத்தர் கையாள இடமளிக்கமுடியாது. எனவே குறித்த வயல்நிலங்களை காரைதீவு பெரும்பாக பிரிவுக்குள் கொண்டுவர இச்சபை நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
இவ்வாறு காரைதீவு பிரதேசசபையின் 2வது மாதாந்த அமர்வின்போது உரையாற்றிய சபை உறுப்பினர்களான ஆ.பூபாலரெத்தினம் மு.காண்டீபன் இரா.மோகன் எஸ்.ஜெயராணி ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.
 
இவ் அமர்வு (14) திங்கட்கிழமை மாலை சபாமண்டபத்தில் சபையின் தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றபோதே மேற்கண்டவாறு அவர்கள் குரலெழுப்பினர்.
 
அவர்கள் மேலும் உரைநிகழ்த்துகையில்:
காரைதீவு எல்லைக்குள் உள்ள அத்தனை இடங்களுக்கும் காரைதீவு எனப்பெயரிடப்படவேண்டும். காரைதீவு எல்லைக்குள் உள்ள ச.தொ.ச விற்பனை நிலையத்தில் வழங்கப்படும் பற்றுச்சீட்டில் சாய்ந்தமருது என்றுள்ளது. இது எப்படி கல்முனை மாநகரஎல்லைக்குள் வரும்? உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
மாளிகைக்காட்டிலுள்ள பஸ்தரிப்பு நிலையத்தைச்சுற்றி வேலி போடப்பட்டுள்ளதை சபை அறியவில்லையா? இதனை நீக்கவேண்டும். வெட்டுவாய்க்காலில் வந்துசேரும் 3500ஏக்கர் வயல்காணிகளின் வடிச்சல் அசுத்தநீரால் பொதுமக்களுக்கும் பயிர்பச்சைகள் மீன்களுக்கும் பாரியபாதிப்பு ஏற்பட்டுவருகின்றது. அதனை நேராக கடலுக்குள் செலுத்தவேண்டும்.  என்றனர்.
 
ஸ்ரீல.மு.கா உறுப்பினர் எம். இஸ்மாயில் உரையாற்றுகையில்: ரமழானுக்கு முதல் சகல வீதிகளிலும் மின்விளக்குகள் எரியவேண்டும். மாளிகைகாட்டிலுள்ள ஒரேயொரு தோணாவுக்கான பாலம் திருத்தியமைக்கப்படவேண்டும்.என்றார்.
 
த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் சபாபதி நேசராசா உரையாற்றுகையில்: தேசிகர் வீதி படுமோசமாகவுள்ளது. அதற்குகொங்கிறீட் இடப்படவேண்டும். விவேகானந்தா வீதி மேடும் பள்ளமுமாக உள்ளது. ரீஓ வின் அசிரத்தையே காரணம். நிதிப்பங்கீட்டின்போது எது முக்கியமோ அதற்கு நிதி ஒதுக்கப்படவேண்டுமே தவிர இனரீதியாக பிரிக்கத்தேவையில்லை என்றார்.
 
உறுப்பினர் பஸ்மீர் உரையாற்றுகையில்: நுண்கடனை ஒழிக்கவேண்டும். எயார்ரெல் ரவர் அமைக்க அனுமதிவழங்கக்கூடாது. ரென்டர் சபையில் ஏனையோரும் உள்வாங்கப்படவேண்டும் என்றார்.
 
த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் த.மோகனதாஸ் பேசுகையில்:
காரைதீவு தென்எல்லையிலுள்ள வெட்டுவாய்க்காலில் நிந்தவூரிலிருந்து வரும் அசுத்தநீர் கலந்து இங்குள்ள பயிர்பச்சைகள் அழிவதோடு மீனினங்களும் அழிகின்றன. எனவே அதனைத்தடுத்து நேராக கடலுக்குள் விவேண்டும்.இங்குள்ள மதுச்சாலைக்கான உத்தரவுப்பத்திர அனுமதியை எதிர்க்கவேண்டும்.என்றார்.
 
அ.இ.தே.காங்கிரஸ் உறுப்பினர் ஜலீல் உரையாற்றுகையில்: மாவடிப்பள்ளி அரிசிஆலைகளால் சூழல் மாசடைகின்றது. மக்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்படுகின்றது. அவர்களுக்கான உரிமம் வழங்குவதில் எமது கருத்தையும்; பெறவேண்டும்.என்றார்.
 
ஸ்ரீல.மு.கா உறுப்பினர் றனீஸ் உரையாற்றுகையில்: நுண்கடனை முற்றாகத்தடைசெய்யவேண்டும்.  வீதிகளுக்கான பெயர்ப்பலகைகளை மாவடிப்பள்ளியிலும் இடவேண்டும். என்றார்.
 
த.தே.கூ.உறுப்பினர் சின்னையா ஜெயராணி உரையாற்றுகையில்:
சபையின் ஒரேயொரு பெண் உறுப்பினர் என்றவகையில் அனைவருக்கும் அன்னையர்தின வாழ்த்துக்களைத்தெரிவிக்கிறேன்.வெட்டுவாய்க்கால் கழிவுநீரை நேராக கடலுக்குள் செலுத்துதல் வேண்டும். சலவைத்தொழிலாளிகள் கஸ்ட்டப்படுகின்றார்கள். 11ஆம் 12ஆம் பிரிவு மக்கள் வறுமைப்பட்டவர்கள். அவர்களுக்கு சேவைசெய்வதில் முன்னுரிமை வழங்கவேண்டும்.காரைதீவை பிரித்தாளக்கூடாது. என்றார்.