72 வருடங்களின் பின் மட்டு. ஆசிரியர் கலாசாலைக்கு 3 மாடிக்கட்டடம்

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் புதிய 3 மாடி நிருவாகக்கட்டத் தொகுதிக்கான அடிக்கல் நடும் வைபவத்திற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பிரதம விருந்தினராக கலந்து கொள்கிறார்.
எதிர்வரும் சனிக்கிழமை (19) காலை 9.30 மணிக்கு கல்லூரி அதிபர் வி.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம சிறப்பு அதிதியாகக்கலந்து கொள்கிறார்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.சிறிநேசன், எஸ்.வியாளேந்திரன், எஸ்.யோகேஸ்வரன் ஆகியோரும் கௌரவ அதிதிகளாகக்கலந்து கொள்கின்றனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நல்லையாவின் பெரு முயற்சியால் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலைக்கு 72 வருடங்களுக்குப் பின்னர் புதிய மூன்று மாடிக்கட்டடம் ஒன்று அமைக்கப்படவுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வி.மகேஸ்வரன் ஏற்பாட்டில் இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆசியர் கலாசாலையின் விரிவுரையாளர்கள், கல்வி சாரா ஊழியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் முதலாம் வருடம் மற்றும் இறுதி வருடங்களைச் சேர்ந்த ஊவா, மத்தி, சப்பிரகமுவ மாகாணங்களிலிருந்து வருகை தந்த 637 ஆசிரிய உதவியாளர்கள் கல்வி கற்று வருகிறார்கள்.
இந்தக் கலாசாலையில் கல்வி கற்று ஆசிரியர்களாக பயிற்சிபெற்று வெளியேறிய சுமார் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறாரகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு முதன்மொழி தமிழ், ஆங்கிலம், சமூகவியல், ஆரம்பப்பிரிவு, மனைப்பொருளியல், இரண்டாம் மொழி தமிழ், ரோமன் கத்தோலிக்கம் ஆகிய கற்கை நெறிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான கற்றல் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.