இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த கணிதமேதை கல்வியியல் மேதை.கோணேச பிள்ளை.முனைவர் மு.இளங்கோவன்

மட்டக்களப்பை அடுத்துள்ள மண்டூரில் வாழ்ந்த கணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை அவர்கள் நேற்றுமுன்தினம்(14)  இயற்கை எய்தினார்.  நேற்று(15) மண்டுரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 
மரணிக்கும்போது அவருக்கு வயது 89.  அமரர் கோணேச பிள்ளை அவர்கள் விபுலாநந்த அடிகளாரால் நேரடியாக ஆற்றுப்படுத்தப்பட்டு சிவாநந்த வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர்.
 
 
சிறப்புக் கணித ஆசிரியராகவும், ஆங்கில ஆசிரியராகவும், கண்டி ஆசிரியர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அட்டாளைச் சேனை ஆசிரியர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கல்வித்துறையிலும், திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய பெருமைக்குரியவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் முனைவர் பட்டம்(1998) பெற்றவர். கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் தம் கலாநிதிப் பட்டப்பேற்றினைப் பெற்றவர். முது விஞ்ஞான மாணி, முது கலைமாணி பட்டங்களைப் பெற்றவர் “சர்வதேசக் கல்வியும் ஐக்கிய நாடுகள் சபையும்” என்னும் கற்கையில் பங்குபற்றி உச்சப் புள்ளியான ஏ பிளசைப் 
( A +) பெற்றவர்.
 
அமெரிக்காவில் கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்திற்குரிய ஆய்வறிக்கையை ஒப்படைத்துக் கல்வியியல் கலாநிதி, தத்துவக் கலாநிதி ஆகிய பட்டங்களைப் பெற்றவர். பொட்சுவாணாவுக்குச் (Botswana) சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பின்னர் இலங்கை திரும்பியவர். இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் பணி செய்தவர். 
 
அமரர் கோணேசபிள்ளை பற்றி இந்தியாவைசேர்ந்த முனைவர் மு.இளங்கோவன் கூறுகையில்: 
 
திரு. கோணேச பிள்ளையை நாங்கள் அண்மையில் சந்தித்தபொழுது உடல் தளர்வுற்று இருந்தார். படுக்கையிலிருந்தவரை எழுப்பிஇ சக்கர நாற்காலியில் வெளியில் கொண்டு வந்து படப்பிடிப்பை நிகழ்த்தினோம். அவர் அறையில் கணினியில் அமர்ந்து நாளும் உலகத் தொடர்பைப் பெற்றிருந்தார். உடனுக்குடன் மறுமொழி விடுக்கும் இயல்புடையவர். ஆங்கில அறிவும் கணக்கு அறிவும் கல்வியியல் அறிவும் நிரம்பப் பெற்றவர். கல்வியிலும் ஆராய்ச்சியிலும் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டிருந்த காரணத்தால் திருமணம் செய்துகொள்ளவில்லை. தம் உறவினர்களின் அரவணைப்பில் தம் இறுதிக்காலத்தைக் கழித்துவந்தார்.
 
திரு. கோணேச பிள்ளை அவர்கள் என்னுடன் தொடர்ந்து நல்ல தொடர்பில் இருந்தார். அடிக்கடி மின்னஞ்சலில் தொடர்புகொள்வார். ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் வரைந்த பல மடல்கள் என்னிடம் உள்ளன. விபுலாநந்தர் குறித்த அரிய செய்திகளை அவரிடமிருந்து பெற்றுள்ளேன். அண்மையில் அவர் எழுதிய பலதுறை அறிவுசார் கட்டுரைகள் (கணித, விஞ்ஞான, கல்விசார் கடுரைகள்) என்ற நூலினை எனக்கு அனுப்பி என் கருத்தைக் கேட்டிருந்தார். மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பான அந்த நூல் கலாநிதி கோணேச பிள்ளையின் பெருமையை என்றும் சொல்லிக்கொண்டேயிருக்கும். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த கணிதமேதை கல்வியியல் மேதை என்று கோணேச பிள்ளையைச் சொல்லலாம். நம் காலத்தில் வாழ்ந்து உரிய சிறப்பினைப் பெறாமல் போன எத்தனையோ மேதைகளைப் போல் நம் கோணே சபிள்ளைக்கு உரிய சிறப்புகளும் அமையாமல் போனமை நம் போகூழ் என்றே சொல்ல வேண்டும்.என்றார்.