சம்பூரில் பொது மக்களின் காணிகளில் படையினர் தென்னை மரம் நடுகை உரிமையாளர்கள் முறைப்பாடு.

பொன்ஆனந்தம்

திருகோணமலை சம்பூர்கடற்படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வரும் தமக்குரித்தான விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

குறித்த காணிகளில் கடந்த ஒருவாரமாக படையினர் தென்னைமரம் நடுவதற்காக டோசர்மூலம் துப்பரவு செய்து வருதுடன் பலரின் காணிகளில் தென்னைமரங்களும் நடப்பட்டுள்ளதாக முறையிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக திங்களன்று மாலை சம்பூர்கிராம அமைப்புக்கள் பல இணைந்து குறித்த கடற்படை உயரதிகாரிகளுடன் நேரடியாக சென்று தமது ஆட்சேபனையை வெளியட்டபோது தாம் இக்காணிகளை சட்டரீதியாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் அதற்கான சில ஆவணங்களையும் காண்பித்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட கிராம அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இச்சந்திப்பில் கிராமசேவகர்,கிராம அபிவிருத்திச்சங்கப்பிரதிநிதிகள்,மினவசங்கப்பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களும் பங்குகொண்டிருந்தனர்.

குறித்த பகுதியில் உள்ள தமது வாழ்வாதார முயற்சிக்கான காணிகளை விடுவித்து தருமாறு பலமுறை ஜனாதிபதிக்குகடிதம் அனுப்பியதுடன் திருகோணமலை மாவட்ட செயலாளர் ,கிழக்கு மாகாண ஆளுநரையும் சந்தித்து தாம் கடிதங்களையும் நேரடியாக ; வழங்கியுள்ளதாக தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளுராட்சித்தேர்தல் முடிவடைந்ததும் இவ்விடயத்தை கவனிப்பதாக மாவட்ட செயலாளர் என்.ஏ.புஸ்பகுமார தமக்கு உறுதிவழங்கியதாகவும் ஆனால் தற்சமயம் படையினர் காணிகளை அபிவிருத்தி செய்து வருவது தமக்கு பெரும் ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவித்தனர்.

இதுவிடயமாக ஏலவே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குளவிற்கும் எழுத்துமூலமாக அறிவித்தநிலையில் குறித்த இடங்களுக்கு உயரதிகாரிகளும் நேரடியாகச்சென்று காணிகளைப்பார்வையிட்டு விசாரணைகள் தொடர்ந்து வருகின்றனர்.

இதேவேளை திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள்       ஆணைக்குழுஅலுவலகத்திலும் சகல ஆவணங்களுடனும் முறைப்பாடுகளை மக்கள் வழங்கியிருந்தனர்.

இம்முறைப்பாட்டில் காணி ஆவணங்கள் சார்ந்த பிரதிகளும் மக்களால் இணைக்கப்பட்டுள்ளது இவ்வாறு 109 குடும்பங்கள் முறைப்பாடு செய்துள்ளனர். என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

; இது விடயமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் படையினரின் இந்த காணி அபிவிருத்தி முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனால் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றமான நிலமை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் முறையிடுகின்றனர்.

காணிகள் சிலவற்றில் மக்கள் அனுமதிக்கப்பட்டபோதும் இன்னும் முறையாக பாராதீனம் செய்யவிலலை. இதனால் சட்டரீதியான பிரச்சனைகள் எழும் இடத்தில் தமது காணி உரிமம் உறுதிப்படுத்தாத நிலமையும் இருந்து வருகிறது இதுதொடர்பாகவும் பல முறை எழுத்துமூலம் கடிதங்கள் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்ட போதும் முடிவுகள் இன்னும் கிடைக்காமை தற்போது ஏற்பட்ட நிலமையையே வதிவிடக்காணிக்கும் ஏற்படும் என மக்கள் அச்சம்வெளியிடுகின்றனர்.