நியமனத்தை துரிதமாக வழங்கவும்!

நிரந்தர நியமனம்கோரி கடந்த 30வருடகாலமாக நடாத்திய போராட்டத்தின்பலனாக கிழக்குமாகாணத்தில் 456தொண்டராசிரியர்களின் தெரிவு அமைந்துள்ளது. நேர்முகத்தேர்வு மிகவும் செம்மையாகவும் நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெற்று இந்தத்தெரிவு இடம்பெற்றுள்ளது. எனவே எமக்கான நியமனங்களை தாமதிக்காமல் துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நல்லாட்சி அரசாங்கத்தை தாழ்மையாக வேண்டுகின்றோம்.
இவ்வாறு கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கம் நடாத்திய ஊடகமாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வூடக மாநாடு சம்மாந்துறையில் (15) செவ்வாய்க்கிழமை சங்கத்தலைவர்  ஜ.எம்.பௌசர் தலைமையில் நடைபெற்றது.
அங்கு சங்கத்தின் தலைவர் ஜ.எம்.பௌசர் செயலாளர் ஏ.வகாப் அம்பாறை மாவட்டச்செயலாளர் ஏ.நௌபர் சிங்களமொழிமூல பிரதிநிதி ஏ.டி.மங்கலிக்கா ஆகியோர் கருத்துரைத்தனர்.
அவர்கள் ஊடகமாநாட்டில் தெரிவித்ததாவது:
கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றுமுடிந்த தொண்டராசிரியர்களுக்கான தெரிவானது எந்த அரசியல் கலப்புமற்று நேர்மையாக இடம்பெற்றுள்ளது. தகுதியானவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனங்களை துரிதமாக வழங்க இந்தநல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கடந்த 9.1.2018இல் எடுக்கப்பட்ட அமைச்சரவைத்தீர்மானத்திற்கமைவாக இந்நேர்முகப்பரீட்சை நீதியாக இடம்பெற்றது. தகுதியான 456பேரின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது. தகுதியற்றவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அதிலும் நியாயமான காரணங்களிருந்தால் மேன்முறையீடு செய்யலாமென ஆளுநர் கேட்டுள்ளார்.
இத்தனை வெளிப்படையாக இதயசுத்தியுடன் செயற்படும் ஆளுநர் ரோஹிதபோகொல்லாகம மற்றும் கல்விச்செயலாளர் பி.திசாநாயக்காவை பாராட்டுகின்றோம். மேலும் அமைச்சரவைத்தீர்மானத்தை எடுப்பதற்கு காரணமாயிருந்த கல்விஅமைச்சர் அகிலவிராஜ் காரியவாசத்திற்கு நன்றிகூறுகின்றோம்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆணிவேர் எமது ஜனாதிபதி மைத்ரிபாலசிறிசேன பிரதம மந்திரி ரணில்விக்ரமசிங்க எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் பிரதியமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் உள்ளிட்ட அனைவரையும் நன்றியோடு பார்க்கின்றோம்.
மேலும் பல தொண்டராசிரியர்கள் கணவர் குழந்தைகுட்டிகளுடன் சமுகமளித்திருந்தனர்.