தனியார் காணிகளை இராணுவத்தினரின் பாவனைக்கு வழங்குவதை தான் ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன்.அலி சாஹிர் மௌலானா

ஏறாவூர் புன்னைக்குடா பிரதேசத்தில் உள்ள தனியார் காணிகளை இராணுவத்தினரின் பாவனைக்கு வழங்குவதை தான் ஒரு போதும் அனுமதிக்க போவதில்லை என தேசிய நல்லிணக்கம் – ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா காட்டமாய் தெரிவித்தார்
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் இராணுவ முகாம்கள் – பொலிஸ் நிலையங்கள் அடங்கலாக பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்து அவற்றை வேறு இடங்களுக்கு மாற்றுவது தொடர்பான உயர் மட்ட கூட்டம் நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மீள் குடியேற்ற – புனர்வாழ்வு இந்துக்கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் பொன்னையா சுரேஷ் தலைமையில் இடம் பெற்றது,
அதன் போது ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் அமைந்துள்ள தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரித்து இராணுவ களஞ்சியசாலை அமைப்பது தொடர்பான விடயம் கொண்டு வரப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான அலி சாகிர் மௌலானா கடும் தொனியில் தனது எதிர்ப்பினை வெளியிட்டதுடன் , பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை கையகப்படுத்த தான் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை என இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் காணி அதிகாரிகளின் செயற்பாட்டுக்கு தனது கண்டனத்தை வெளியிட்டார் .

பொது மக்கள் செறிந்து வாழும் பகுதியை அண்டியதாக பாரிய முகாம் அமைப்பது பொருத்தம் அற்றது , அத்துடன் பாரிய இடப் பற்றாக்குறையை மக்கள் எதிர் கொண்டு வரும் சூழலில் பொது மக்களின் காணிகளை தாரை வார்த்துக் கொடுக்க முடியாது- யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொள்ள காணிகள் அற்றவர்களாகவும் , அரசினால் அமுல் படுத்தப்படும் வீடமைப்பு திட்டங்களை கூட செயலுறுப்படுத்த பொருத்தமான காணிகள் இல்லாத சூழல் எமது பிரதேசங்களில் நிலவும் நிலையில் பல ஏக்கர் காணிகளை சுவீகரித்து இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கை இடை நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்-
அதனை தொடர்ந்து இராணுவத் தரப்பில் மாற்றுக் காணியை அடையாளம் காண முயற்சிப்பதாகவும் – இதற்காக பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தலைமையகத்தின் வழிகாட்டலில் செயற்பாடுகளை முன்னெடுக்கவும் அவகாசம் கோரப்பட்டது .
குறித்த உயர் மட்ட கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மன்சூர் , ஸ்ரீநேசன் , வியாழேந்திரன் உட்பட மாவட்ட அரசாங்க அதிபர், அமைச்சின் அதிகாரிகள் , பிரதேச செயலாளர்கள் , திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது ,