முகவர்கள் மூலம் எந்தவிதப்பணங்களையும் வழங்கி உதவிகளைப் பெறக்கூடாது.பிரதியமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா

அரசியல்வாதிகளிடத்தில் நீங்கள் சேவைகளைப் பெறக்கூடிய தகுதி உங்களுக்குண்டு. அந்த வகையில், நீங்கள் முகவர்கள் மூலம் எந்தவிதப்பணங்களையும் வழங்கி உதவிகளைப் பெறக்கூடாதென தேசிய நல்லிணக்கம் ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்கம் ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சரை வரவேற்கும் நிகழ்வு செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலய கேட்போர் கூடத்தில் கடந்த 13.05.2018ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-
எதிர்காலத்தில் என்னுடைய பணிகளைத் தொடர்வதற்காக ஞாயிற்றுக்கிழமையும், திங்கட்கிழமையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது மக்களைச்சந்திப்பதற்காகவும், புதன்கிழமைகளில் எனது அமைச்சில் பொது மக்களைச் சந்திப்பதற்காகவும் ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றேன்.

எனது சேவையைப் பெற்றுக் கொள்ளுமுகமாக எனது இணைப்பாளர்கள் மற்றும் எமது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களூடாகப்பெறலாம். கடந்த கால அரசியலில் ஊழல், இன, மத பாகுபாடுகளின்றி எனது சேவையைச் செய்து வந்தேன்.

சில அரசியல்வாதிகள் பதவிகள் வருகின்ற நேரத்தில் சில முகவர்கள் அமைச்சரிடம் கூறி விடயத்தை முடித்துத் தருவோமென்று பல தேவையற்ற விடயங்களெல்லாம் இடம்பெறலாம். ஒரு நாளும் நான் ஊழலுக்குச் சம்மதிப்பதில்லை.

எங்களிடத்தில் நீங்கள் சேவைகளைப் பெறக்கூடிய தகுதி உங்களுக்குண்டு. அந்த வகையில், நீங்கள் முகவர்கள் மூலம் எந்தவிதப் பணங்களையும் வழங்கக்கூடாது. கடந்த காலங்களில் அரசியல் செய்தவர்கள் உங்கள் மத்தியில் இழிவான அரசியலைச் செய்திருக்கின்றார்கள்.

இளம் பெண்கள் உதவி கேட்டுச்சென்றால் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யாமல், இழுக்கான முறையில் இழிவான அரசியல் செய்த அரசியல்வாதிகளையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம். இவ்வாறான செயல்களுக்கு ஒரு நாளும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அனுமதிக்கக்கூடாது.

பதினெட்டு மாதங்களிற்குள் துரிதகதியில் அபிவிருத்திகளைச் செய்வதற்கு கடமைப்பட்டுள்ளோம். அந்த வகையில், அரசாங்கம் என்னிடத்தில் பொறுப்புக்களை வழங்கியுள்ளது. அரச கரும மொழிகள் அமுலாக்கல் சம்பந்தமாக பாடசாலைச் சமூகத்தினுடன் சம்பந்தப்பட்டு செயற்பட வேண்டியப ல விடயங்களுள்ளன.

சகல இனங்களுடன் செயற்பட வேண்டிய வீதி அபிவிருத்தி, பாலம் அமைத்தல், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற அபிவிருத்திகள் இருக்கின்றது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்களூடாகவும் எங்களது சேவைகள் தொடர வேண்டும்.

நாங்கள் பாரபட்சம் பார்ப்பதில்லை. முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் இந்நாட்டில் சமாதான, சகவாழ்வு வாழ்வதற்காக நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், இறமைக்கும் எப்போதெல்லாம் சவால் ஏற்பட்டதோ அந்த நேரத்தில் நாட்டுப்பற்றுடன் எமது முஸ்லிம்கள் என்றும் இருந்திருக்கின்றார்கள்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்களை வடக்கு, கிழக்கு அதற்கு வெளியிலும் கவனமான முறையில் தலைவரது தலைமையில் தீர்வுகளைக் காண்பதற்காக முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

தேசிய ரீதியாக இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, பௌத்தர்கள் அத்தனை சமூகத்தவர்களுக்கும் சமமான முறையில் சமாதான சகவாழ்வகளைப் பெற்று வாழ்வதற்காக எங்களது சேவைகளைக் கண்ணும் கருத்துமாக தியாகத்தன்மையுடன் செய்யக்கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

நல்லிணக்கம் ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சரின் இணைப்பாளர் இஸ்மாயில் சபீக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எல்.ஏ.கபூர், எம்.ஐ.இம்தியாஸ், எம்.வி.வாசுதீன், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.ஏ.அன்வர், ஐ.எல்.பதுர்தீன், எஸ்.அஸீஸுர் ரஹீம், பி.எஸ்.ஜெஸீமா, எம்.ஐ.மாஜிதா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது, தேசிய நல்லிணக்கம் ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டு, நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டதுடன், சிறுமியரின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது