தமிழரசுக் கட்சி அனைவரையும் தவிர்த்துவிட்டு பயணிக்க முடியாது.சித்தார்த்தன்

தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகவே முடிவெடுத்து வருகின்றது. அக்கட்சி அனைவரையும் தவிர்த்துவிட்டு பயணிக்க முடியாது என தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற தமிழீழ விடுதலை கழகத்தின் மத்திய குழு கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “தமிழரசு கட்சியின் கைகளிலேயே அதிக பொறுப்பு இருக்கின்றது. அனைவரையும் தவிர்த்துவிட்டு போக முடியாது. நாம் மக்களின் விடுதலையை விரும்புகிறவர்களாக இருந்தால் ஒற்றுமையாக செயற்படவேண்டிய தேவை இருக்கிறது.

அத்துடன் எமது தரப்பிலும் ஒத்த கருத்துக்களை உடைய கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ் கூட்டமைப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகிறோம். இதற்கு கூட்டமைப்பில் உள்ள 3 கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்.

அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தெரிவிலே எமது கட்சிக்குள்ளும் பல கருத்துக்கள் இருக்கின்றன. சிலர் தற்போதைய முதலமைச்சரையே மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த விரும்புகிறார்கள். சிலர் மாற்றுக் கருத்துடன் உள்ளார்கள். அந்த விடயத்தில் எமது 3 கட்சிகளும் இணைந்து கலந்தாலோசித்து முடிவெடுக்கும்.

மேலும், முதலமைச்சர் தனிக் கட்சி ஆரம்பித்தாலும், அக்கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஓர் அங்கமாக மாறக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன.

மக்களின் அரசியல் தீர்வு மற்றும் அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வு போன்ற இரு பாதைகளில் நாம் பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. ஆனால் நாம் மக்களின் அன்றாட பிரச்சினைகளில் மிகவும் மந்தமாகவே செயற்பட்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார்.