பழுகாமம் சிறுவனுக்கு கண் பார்வைக்கான சத்திர சிகிச்சை – சுவிஸ் வாழ் உறவுகள் உதவி!

(கேதீஸ்)
இரண்டு கண்களும் பார்வை குறைவடைந்து எதிர்காலமே கேள்விக்குறியாகி இருந்த பழுகாமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கு சுவிஸில் வாழும் எமது உறவுகளின் உதவியால்  கண் சத்திர சிகிச்சை நடைபெற்று பார்வையை பெற்றுள்ளான்.

இளமையிலேயே தந்தையையும் இழந்த 10 வயதுடைய ஜெயதீபன் மனோஜ் என்ற சிறுவனின் நிலைமையை  பரமேஸ்வரன் எனும் ஆசிரியர் ஒருவர் மூலம் அறிந்துகொண்ட பாண்டிருப்பைச் நேர்ந்த சுவிஸில் வசிக்கும் விஜியகுமாரன் என்ற மனித நேயமிக்கவரின் முயற்சியால் இந்த உதவிகள் செய்யப்பட்டுள்ளது.

சுவிஸ் ஊஸ்ரர் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில்; அப் பிரதேசத்தில் வசிக்கும் எமது தாயக உறவுகளின் வருடாந்த ஒன்று கூடல் கடந்த வருடம் (2017) கிறிஸ்மஸ் தினத்தில் நடைபெற்றபோது திரு விஜிகுமாரன் இந்த சிறுவனின் நிலைமையை  உறவுகளுக்கு தெரியப்படுத்தியதும் அங்கு கூடியிருந்த எமது உறவுகளான சிறுவர்களே தங்கள் பெற்றோர் மூலம் நிதியை சேகரித்து இலங்கை ரூபாய் 193000 வழங்கியிருந்தார்கள்.

மனோஜின் கண்களுக்கான முதலாவது சத்திர சிகிச்சை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  கடந்த மார்ச் மாதம் ஏழாம் திகதி நடைபெற்றதுடன் இரண்டாவது சத்திரசிகிச்சையும் கடந்த ஏப்பரல் மாதம் 11 ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றிருந்தது. இந்த நிதி மூலம் இவருக்கான கண் வில்லைகள் கொள்வனவு செய்யப்பட்டதுடன் மீதிப்பணத்திற்கும் இந்த சிறுவனின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக சிறு கடைக்கான பொருட்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த மாதம் விடுமுறையில் இலங்கை வந்த விஜியகுமாரன் இந்த சிறுவனை நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் இவரின் கல்விக்கும் தன்னால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்யவுள்ளதாகவும்  தெரிவித்தார்.