மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 32பாடசாலைகளுக்கு அதிபர்கள் இல்லை.

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள 32பாடசாலைகளுக்கு அதிபர்கள் இல்லை. ஆசிரியர்களை கொண்டே பாடசாலைகளை வழிநடத்துகின்றோம். என மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தில், தேசியமட்டத்தில் சமூகவிஞ்ஞானப் போட்டியில் முதலிரு இடங்களையும் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை(12) நடைபெற்ற போதே இதனைக் குறிப்பிட்டார்.

வலயக்கல்விப் பணிப்பாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சிறந்த ஆசிரியர்களும், மாணவர்களும் இணைகின்ற போது சாதனை சாதாரணமாகின்றது. இதனை காஞ்சிரங்குடா வித்தியாலய மாணவிகள் நிருபித்திருகின்றனர். நகர் பாடசாலைகளையும், எத்தனையோ வசதிகளுடன் உள்ள பாடசாலைகளையும் பின்தள்ளி, அதிகஸ்ட பாடசாலையாக இருந்து கொண்டு காஞ்சிரங்குடா பாடசாலை சாதித்தமை மிகவும் எடுத்துக்காட்டத்தக்கதான விடயமுமாகும்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், இலங்கையிலே இறுதி வலயமென்ற இடத்தினை பொதுப்பரீட்சைப் பெறுபேறுகளில் அடிப்படையில் கடந்த காலங்களில் வகித்தது. இதனை மாற்றியமைப்பதற்காக மாணவர்களும், ஆசிரியர்களும், அதிபர்களும், கல்வி அதிகாரிகளும் சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்தனர். இதனால் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் இறுதியிலிருந்து முன்னிலைக்கு சென்றிருக்கின்றது. இன்னமும் பல வலயங்களை பின்தள்ளி முன்னிலை வகிக்க வேண்டுமென்ற எண்ணத்தில், பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் ஆளணிப் பற்றாக்குறையும் எமது பாடசாலையில் இருந்துகொண்டே இருக்கின்றன.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள 32பாடசாலைகளுக்கு அதிபர்கள் இல்லை. இதனால் ஆசிரியர்களைக் கொண்டே அவ்வாறான பாடசாலைகளை முகாமைத்துவம் செய்துகொண்டிருக்கின்றோம். அதே போல எமது மாகாணத்தில் உள்ள சில வலயங்களில் ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாக உள்ளதாக அறியமுடிகின்றது. ஆனால் எமது வலயத்தில் 41ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். வருடாந்தம் மாகாணசபையினால் மேற்கொள்ளப்படும் இடமாற்றத்தின் மூலம் 50பேர் மட்டக்களப்பு மேற்கு வலயத்திலிருந்து சென்றால், 25பேரே வேறு வலயத்திலிருந்து மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்காக இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இதே நிலைதான் எதிர்வரும் ஜீன் மாதம் நடைபெறஉள்ள இடமாற்றத்திலும் இடம்பெறவிருக்கின்றது. என்றார்.