கடந்த காலங்களில் விளையாட்டு நிகழ்வுகள் ஒரு மரணவீடாக நடைபெற்றுள்ளதை பார்த்திருக்கின்றோம்

ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி என்பது ஒரு சமச்சீரானதாக அபிவிருத்தியாக இருக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

மண்முனைப் பற்று பிரதேச செயல மட்ட விளையாட்டுப்போட்டி தாழங்குடா லிப்ரா விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை(11.5.2018) பிற்பகல் 3.00மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நவசிவாயம் தலைமையில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உதவி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.நவேஸ்வரன்,ஆரையம்பதி பிரதேச சபைதவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம்,உதவித்திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர்,உதவி பிரதேச செயலாளர்,உத்தியோகஸ்தர்கள்,விளையாட்டுக்கழகங்கள் கலந்துகொண்டார்கள்.

அவர் பேசுகையில்:-இன்று எமது பிரதேசத்திலே விளையாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அவ்வளவு பெரிதாக தெரியவில்லை என்பதை பதிவு செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.இதன் முக்கியத்துவத்தை அண்மையிலே நாட்டின் அரசாங்கம் கொடுக்கும் முக்கியத்துவதிலே பார்த்தால் புரியும்.விளையாட்டுக்கள் தொடர்பான மனிதனுடைய உடல் உளநலன் விருத்தியில் அரசாங்கம் செலவு செய்கின்ற தொகை பாரியதாகவிருக்கின்றது.எதிர் 19 முதல் 24 ம் திகதி வரையும் அரசாங்கம் உடல் உள ஆரோக்கிய வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.தொற்றாநோய்கள் மனிதனை வேகமாக பிடித்து நோயாளியாக மாற்றியுள்ளதை யாவரும் அறிந்திருப்பீர்கள்.

ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி என்பது ஒரு சமச்சீரான அபிவிருத்தியாக இருக்க வேண்டும்.அது சகல துறைகளிலும் பரிணமித்திருக்கவேண்டும்.குறிப்பாக விளையாட்டுத்துறையின் மூலம் ஒரு மனிதனின் உடல் உள ஆரோக்கியத்தை கொண்டுவருவதன் மூலம் ஒரு மனிதனின் அபிவிருத்தியிலிருந்து குடும்ப அபிவிருத்தி,பிரதேச அபிவிருத்தி,மாவட்ட அபிவிருத்தி,நாட்டின் தேசிய அபிவிருத்தியாக அமைந்து விடுகின்றது.இதனாலேயே இவ்வாறான விளையாட்டு நிகழ்வுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.விளையாட்டில் மட்டக்களப்பு மாவட்ட வீர வீராங்கனைகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள விளையாட்டு வீராங்கனைகளையும்,விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களையும் ஒன்றுதிரட்டி பெரியதொரு விளையாட்டுப் போட்டியை இவ்வருடம் நடாத்துவதற்கு மாவட்ட செயலகம் திட்டமிட்டுள்ளது.இந்த மாவட்டத்தில் உள்ள விளையாட்டுவீரர்களுக்கு சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தி கொடுக்க திட்டமிட்டுள்ளதால் பிரதேசத்திலிருந்து செல்லும் எமது வீரர்கள் மாவட்ட,மாகாண,தேசியமட்டம் சென்று விளையாட்டில் வெற்றிபெற்று மாவட்திற்கு கூடுதலான பதக்கங்களை வென்றே தரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

கடந்த காலங்களில் விளையாட்டு நிகழ்வுகள் ஒரு மரணவீடாக நடைபெற்றுள்ளதை பார்த்திருக்கின்றோம்.அந்தப்போட்டியில் பங்குபற்றும் வீரர்கள் மாத்திரம்தான் விளையாட்டு நடைபெறும் இடத்தில் பார்த்திருக்கின்றோம்.விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுபவர் பங்குபற்றும்நிகழ்ச்சி முடிந்தால் அவரும் வீட்டுக்கே போயிடுவார்.எஞ்சியிருப்பவர்கள் அதிதிகளும்,பரிசை எடுத்துக் கொடுப்பவர்களும்தான்.எமது சமூகம் இதனை மாற்றியமைக்க வேண்டும்.கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை வைத்துக்கொண்டு விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள வேண்டுமென தெரிவித்தார்.

க.விஜயரெத்தினம்