கிழக்கு மாகாணத்தில் தமிழர் சுகாதார சேவைகளில் பாரபட்சம்.வாக்குவாதத்தில் ஸ்ரீநேசன் எம்.பி.

கிழக்கு மாகாணத்தின் தமிழர் பிரதேச சுகாதார சேவை வழங்கு  நிலையங்களும் ,சுகாதார சேவைகளும் தொடர்ந்து திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றமை தொடர்பில் 22.03.2018   அன்று பாராளுமன்றில், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்  அவர்கள் ,சுகாதார பிரதி அமைச்சருடன் செய்த  விவாதத்தை (வாக்குவாதம்) தொடர்ந்து , இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக விசேட கூட்டம் ஒன்று நாடாத்தப்படும் என கௌரவ.சுகாதார அமைச்சர்.ராஜித சேனரேத்ன உறுதியளித்திருந்தார். அதன்படி  நேற்று 11.05.2018 அன்று சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் பங்குபற்ற கிழக்கு மாகாண தமிழ் பாரளுமன்ற  உறுப்பினர்கள் அனைவருக்கும்  அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும்  தமிழர்  தரப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் , அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடிஸ்வரன் மற்றும்  எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான கௌரவ.சம்பந்தன் ஐயா அவர்களும் கலந்தது கொண்டனர். மாகாண மற்றும் மாவட்ட மட்ட சுகாதார சேவை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாணத்தில் சுகாதார சேவை வள பங்கீடுகளில் பாகுபாடு செய்யப்படுவது தொடர்பில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன. ஸ்ரீநேசன் மற்றும் கோடிஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிம் அவர்களது பாரபட்சமான செயற்பாடு தொடர்பாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ‘ஒசுசல’ மருந்தகங்களை அமைக்காமல் பின்னடிக்கப்படுவது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. இங்கு முன்வைக்கப்பட்ட அனைத்து  முறைப்பாடுகள் தொடர்பிலும்  உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கௌரவ.சுகாதார அமைச்சர்.ராஜித சேனாரத்ன உறுதியளித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கவனிக்கப்படாமல் உள்ள  வைத்திய சாலைகளை தரமுயர்த்துதல் ,ஆளணி மற்றும் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துதல் புதிய சுகாதார சேவை மையங்களை அமைத்தல்  போன்ற பல முன்மொழிவுகள் பாராளுமன்ற உறுபினர்களால் அமைச்சரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டன. இவற்றை அமுல்படுத்த சுகாதார அமைச்சர் உறுதியளித்தார்.’

ஒசுசல’ மருந்தகங்களை அமைப்பதற்கான இடங்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் உரிய அதிகாரி பதிலளித்தார். மேலும், தொடர்ந்தும் இவ்வாறான பாரபட்சமான விடயங்கள்  தொடர்பாக அவதானமாக இருப்பது எனவும்  முடிவெடுக்கப்பட்டது.

மட்டகளப்பு மாவட்டத்தில்   மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளபோதிலும் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரமே இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டமையினையிட்டு அங்கு வருகை தந்திருந்த பிரதிநிதிகள் வருத்தம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.