ஏறாவூரில் “ஒசுசல” கிளை மற்றும் ஆதார வைத்தியசாலைக்கு வைத்தியர் விடுதி

ஏறாவூரில் “ஒசுசல” கிளை மற்றும் ஆதார வைத்தியசாலைக்கு வைத்தியர் விடுதி பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா வின் கோரிக்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் ஏற்பு- 
அடுத்த மாதம் நேரில் விஜயம் செய்வார்.

ஏறாவூர் பிரதேசத்தில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஒசுசல கிளை ஒன்றை உடனடியாக திறந்து வைத்து பிரதேச மக்கள் குறைந்த விலையில் மருந்துகளை கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்தல் , மற்றும் ஏறாவூர் வைத்தியசாலையில் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கான விடுதி ஒன்றை நிர்மாணித்து தருமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு- அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் செய்யித் அலி சாஹிர் மௌலானா விடுத்த கோரிக்கையை உடனடியாக ஏற்று நடைமுறைப்படுத்துமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று பணிப்புரை விடுத்ததுடன் அடுத்த மாதம் 17 ஆம் திகதி ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு நேரடியாக விஜயம் செய்யவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் ஏறாவூரில் ஒசுசல கிளை நிறுவுவதற்கான பொருத்தமான இடம் ஒன்றை அடையாளப்படுத்தி ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் நிலவும் சுகாதாரத்துறை தொடர்பான பிரச்சனைகள் தொடர்பில் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளின் பங்கேற்புடன் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் பைசல் காசிம் தலைமையில்  நேற்று வியாழக்கிழமை மாலை சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானாவினால் குறித்த கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு அமைச்சரால் ஏற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்ததக்கது