அரசாங்கத்துக்கான அனைத்து ஆதரவுகளையும் நாங்கள் வாபஸ் பெறவேண்டிய நிலையேற்படும்

நல்லாட்சி அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அனைத்து ஆதரவுகளையும் நாங்கள் வாபஸ் பெறவேண்டிய நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வவுணதீவு காயான்மடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டரங்கு திறப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்றபோது முன்வைத்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். அவர் அதனை நிறைவேற்றாவிட்டால் அரசாங்கத்திற்கு வழங்கும் அனைத்து ஆதரவுகளையும் நாங்கள் வாபஸ் பெறவேண்டிய நிலையேற்படும்.

ஜனாதிபதி ஆட்சிக்கு வரும்போது சிறுபான்மை பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவும் ஜனாதிபதி முறையினை ஒழிப்பதாகவும் கூறி, சிறுபான்மை மக்களின் வாக்குகளைப்பெற்றார். அதனை அவர் இந்த வருடத்திற்குள்ளேயே நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கை அரசாங்கம் எங்களுக்கு சரியான தீர்வினைத்தராது ஏமாற்றியுள்ளது என்ற செய்தியினை சர்வதேசத்திற்கு கூற வேண்டிய நிலையும் ஏற்படும். இதில் சர்வதேசம் மிகவும் கவனமாக இருக்கின்றது.

நாங்கள் இந்த விடயத்தில் ஏதாவது முரண்பட்டால், அரசாங்கம் எங்கள் மீது பழிபோடக்கூடிய சூழ்நிலையும் இருக்கின்றது. எனவே இந்த ஆண்டுக்குள் தீர்வினை வழங்காவிட்டால் சர்வதேசம் ஊடாக சரியான அழுத்தத்தினைக்கொண்டு ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டிய வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

எந்தளவுக்கு தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயத்தில் வேகமாக பயணிக்கின்றோமோ, அதேயளவுக்கு இங்குள்ள முஸ்லிம் மக்களுக்கும் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக செயற்பட்டுவருகின்றோம்” எனத் தெரிவித்தார்.

 

நன்றி

ஆதவன் செய்திகள்