மாகாணத்தில் சாதித்த பன்சேனை : மூன்று வருடங்கள் தொடர் சாதனை

(படுவான் பாலகன்) கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட பெண்களுக்கான காற்பந்தாட்டப் போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பன்சேனை பாரி வித்தியாலய அணியினர் முதலிடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் செ.ஜமுனாகரன் தெரிவித்தார்.

கல்முனை வெஸ்லி மைதானத்தில் இன்று(11) வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறித்த போட்டியின், இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலய அணியினை எதிர்த்தாடிய பன்சேனை பாரி வித்தியாலய அணியினர் ஒரு கோளினை இட்டு முதலிடத்தினை பெற்றுள்ளனர். அதேவேளை அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலய அணியினர் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளனர்.

பெண்களுக்கான காற்பந்தாட்டப் போட்டியில், மாகாணமட்டத்தில் மூன்று வருடங்கள் (2016, 2017, 2018) தொடர்ச்சியாக பன்சேனை பாரி வித்தியாலய அணியினர் வெற்றியீட்டியுள்ளனர். இதன் மூலம் மூன்று முறை தொடர்சாதனை என்ற சாதனையையும், 2018ம் ஆண்டிற்கான முதன்மை அணியினர் என்ற சாதனையையும் புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாதனையை புரிந்துவரும் மாணவர்களுக்கும், வழிகாட்டிய ஆசிரியருக்கும், அதிபருக்கும், ஏனைய கல்வி அதிகாரிகளுக்கும் பாடசாலை சமூகத்தினர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.