காலையில் மாணவர்களும் இரவில் யானைகளும் விளையாடும் ஆபத்தான மைதானம்

— படுவான் பாலகன் —-

சாதிக்கத் துடிக்கும் நாற்பதுவட்டை மாணவர்களுக்கு கரம் கொடுக்கப்போகும் உள்ளங்கள் யார்?

காலையில் மாணவர்களுக்கான விளையாட்டு மைதானத்தில் இரவில் விளையாடுவது யானைகள். இதுதான் நாற்பதுவட்டை மாணவர்களின் நிலை.

விளையாடுவதற்கு ஆர்வமிருந்தாலும், வலய மட்டங்களில் வெற்றிபெற்றாலும் மாகாண, தேசிய மட்டங்களில் பிரகாசிப்பதற்கு கடுமையான பயிற்சியும், முயற்சியும் தேவைதான். பயிற்சியை செய்வதற்கு பிள்ளைகளின் உடலாரோக்கியமும், நிறையுணவும் அவசியம். அதேபோல விளையாட்டுக்கான பொருட்களும் தேவைதான் இவையெல்லாம் இருந்தால் நமது பிள்ளைகளும் தேசியம், மாகாணம் என வெற்றி பெறுங்கள். நம்மட பிள்ளைகளும் மாவட்டத்தின் எல்லையில் வசதிகளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். இதில் எதனைத்தான் நாம் பார்ப்பது என நாற்பதுவட்டை சந்தியில் நின்று புறுபுறுத்துக்கொண்டிருக்கின்றார் சரவணன்.

மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம்தான் நாற்பதுவட்டை கிராமம். இக்கிராமத்தில்தான் பல ஊர்களை சேர்ந்த பிள்ளைகள் கல்வி கற்கும் நாற்பதுவட்டை விபுலானந்த வித்தியாலயம் அமைந்துள்ளது. இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் விளையாட்டிலும் சாதனை வீரர்கள்தான் என்பதனை வருடாந்தம் கோட்ட, வலய மட்டங்களில் இம்மாணவர்கள் பெற்ற வெற்றிகள் சான்றாக்கி நிற்கின்றன.

வலயமட்டத்தில் கடந்த மூன்று வருடங்களாக பெண்களுக்கான கிறிக்கட் போட்டியில் இம்மாணவர்கள் வெற்றிபெற்றாலும், மாகாணமட்டத்தில் முதலிரு இடங்களையும் பெறுவதில் சவால்களையே எதிர்கொண்டு வருகின்றனர். அன்றாடம் கிறிக்கட் விளையாடுகின்ற பெண்களாக இம்மாணவர்கள் இல்லாவிட்டாலும் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்பதற்காக தமது சூழலில், பாடசாலையில் கிடைக்கின்ற வசதிகளைப்பெற்றே மாகாணமட்டம் வரை சென்று வருகின்றனர். பாடசாலை, சூழலில் கிடைக்கும் வசதிவாய்ப்பென்று கூறியதனால் வசதி, வாய்ப்பு கிடைக்கின்றதுதானே என சிலர் எண்ணமுடியும். இங்கு வசதி வாய்ப்பென்பது, பிள்ளைகளின் முயற்சியென்ற வசதியும், ஆசிரியரின் பயிற்சி மட்டுமேயாகும் என்பது மாணவர்களின் கருத்தாகின்றன.

கிறிக்கட் விளையாடுவதென்றால் நகர்ப்புறங்களிலே உள்ள பாடசாலை மாணவர்களுக்கென வசதிகள் அடங்கிய விளையாட்டு மைதானம், பாதணி தொடக்கம் சகலவிதமான விளையாட்டுப்பொருட்கள், விளையாட்டுப் பயிற்சிக்கென பயிற்றுவிப்பாளர்கள் என எத்தனையோ வசதிகளைப் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்களுடன் ஈடுகொடுக்க இறைவன்கொடுத்த சக்திமட்டுமே நாற்பதுவட்டை மாணவர்களிடம் உள்ளது எனலாம்.

காட்டை ஒதுக்கி பெறப்பட்ட மேடுபள்ளமான ஒரு திடல்தான் நாற்பதுவட்டைப் பாடசாலையின் மைதானம், அம்மைதானத்தில் எட்டிக்கடக்கும் இடமெல்லாம் மலைக்குன்றுகள். மைதானத்தினைச் சுற்றி உயர்ந்த மதில்கள் அல்ல. இயற்கையாகவே வளர்ந்து நிற்கும் காடுகள்தான் மதில்களாகின்றன. ஓங்கி பந்தினை அடித்தால் காட்டிற்குள் தேடித்தான் பந்தை எடுக்க வேண்டும். காலையில் மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் இரவில் யானை போன்ற மிருகங்களின் விளையாட்டு மைதானம். இவற்றில்தான் பயிற்சியெடுகின்றனர் இம்மாணவர்கள்.

விளையாட்டில் ஈடுபடுவதென்றால் பயிற்சி வேண்டுமென கூறுகின்ற அதேவேளை, பயிற்சியை செய்வதற்கு உடலில் சக்தியிருக்க வேண்டும். அச்சக்தியை பெறுவதற்கு நிறையுணவு உடலுக்கு கிடைக்க வேண்டும். ஆனால் இப்பிள்ளைகளுக்கு நிறையுணவு என்பதும் எட்டாக்கனியே. இதனாலும் மாகாண, தேசிய ரீதியில் சாதிக்க தவறுகின்றனர் என்ற கருத்தும் சரவணன் போன்றோரால் முன்வைக்கப்படுகின்றன.

அன்றாடம் கூலிவேலை செய்து குடும்பத்தினை கொண்டு செல்லும் மக்களாக உள்ளமையினால், பசிக்கு எதையோ? சாப்பிட்டால் போதும் என்ற நிலையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உணவு சமைத்து உண்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இதனால் நிறையுணவுபற்றி சிந்திப்பதோ? தேடுவதோ? இவர்களிடம் இல்லை. பால் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டாலும், பாலைக்குடிப்பவர்கள் இங்கில்லை. இதனால் பால்கள் ஏனைய உற்பத்திகளுக்காக வேறு பிரதேசங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறான நிலையில் விளையாட்டு பயிற்சிக்குத்தேவையான நிறையுணவு தொடர்பிலான வசதிவாய்ப்பினையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய தேவையும் உள்ளது.

காடு முட்பற்றைகள் கால்களை பதம்பார்க்கக் கூடும் என்ற பயத்தில் பாதணிகளை அணியும் அதேவேளை அரசாங்கத்தினால் வழங்கப்படும் பாடசாலை பாதணியை பாடசாலை நேரத்தில் அணிந்துவரும் மாணவர்களிடத்தில், விளையாட்டு பாதணி கொள்வனவு செய்யக்கூறுவதும், ஏனைய விளையாட்டுப்பொருட்களை கொள்வனவு செய்யக்கூறுவதும் சாத்தியமற்றது. கூறுவதினால் விளைவு விளையாட்டில் பங்கேற்காதே என்ற பதில்தான் பெற்றோர்களிடமிருந்து வெளிவரும். அதற்காக பாடசாலை முயற்சியெடுக்காவிட்டால் பிள்ளையின் திறமையும் மழுங்கடிக்கப்பட்டுவிடும். பெற்றோருக்கு பிள்ளை தரம் – 11வரை கற்றால்போதும் என்ற மனநிலை மறாதவர்களும் பலர் இருக்கின்ற நிலை, அதேவேளை பெற்றோரே குடும்பத்தினை வழிநடத்துவதில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்ததான சூழலில் பெற்றோரின் முழுமையான ஒத்துழைப்பும் சாத்தியமற்றதே. இந்நிலையில்தான் அன்றாடம் ஆடம்பரத்திற்காக அதிக பணங்களை செலவு செய்யும் உள்ளங்கள் அல்லது சாதனைக்காக ஏங்கும் பிள்ளைகளுக்கு உதவும் மனங்கொண்டவர்கள் உதவி செய்வார்கள் என்ற அவாவுடன் காத்திருக்கின்றனர் நாற்பதுவட்டை மாணவர்கள்.