வாகனேரியில் யானை தாக்கி இதுவரையில் 25 பேர் மரணம்! ஆர்பாட்டத்தில் மக்கள் ஆதங்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

வாகனேரி சுற்றுலா விடுதி வீதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் குமார் (வயது 34) என்பவரே இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து வாகனேரி குளத்திற்கு அருகில் காணப்படும் சடலத்திற்கு முன்பாக பொதுமக்கள் உயிரிழந்ததை முன்னிட்டு கவனஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இதன்போது நாங்களும் வாழ வேண்டும் வாகனேரி மக்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவும், யானை வேலியை அமைத்து தாருங்கள், குடிநீர் வசதியை ஏற்படுத்தி தாருங்கள், வீதி விளக்குகளை அமைத்து தாருங்கள், எத்தனை காலம் இப்படி வாழ்வது எத்தனை உயிர்களை இழந்து விட்டோம் இனியாவது எமது உயிரை காப்பாற்றுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் மக்கள் கலந்து கொண்டனர்.

வாகனேரி பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்கி இதுவரையில் இருபத்தைந்து பேர் மரணமடைந்துள்ளதாகவும், பல காயமடைந்து காணப்பட்டதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் இரவு எட்டு மணியளவில் வாகனேரி பிரதேசத்தினுள் யானை நடமாட்டமே காணப்படுவதுடன், மக்களின் நடமாட்டம் எதுவும் இல்லாமல் மக்கள் பயத்தின் மத்தியில் வீட்டினுள் இருக்கின்றது.

இரவு நேரங்களில் யாரும் வெளிச்சத்தோடு வருகை தந்தால் அவர்களை யானை துரத்தியதும் வெளிச்சத்தை விட்டு ஓடினால் அந்த வெளிச்சத்தை தூக்கி கொண்டு யானை வீதியால் வருகின்றது. மக்கள் பயணிக்கின்றனர் என நினைத்து சென்றால் யானை எங்களை தாக்குகின்றது. இதனால் எங்களது வாகனங்களும் சேதமாக்கப்படுகின்றது என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் மீன் பிடி தொழிலையும், விவசாயத்தையும் நம்பி வாழ்கின்றனர். ஆனால் யானைகளி; நடமாட்டத்தால் எந்த தொழிலும் செய்ய முடியாமல் பெரும் கஸ்டத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே யானை தொல்லையில் இருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக உடனடியான யானை வேலி அமைத்து மக்களை காப்பாற்ற உரிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் முன்வர வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.