கிழக்கு மாகாணத்திலுள்ள சுகாதாரத்துறை இனரீதியாக பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்.

மாகாணசபை வைத்தியசாலையை மத்திய அரசிற்கு வழங்குவதற்கு ஆளுனருக்கு அதிகாரம் உள்ளதா என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஈழமக்கள்புரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஸ்ர உறுப்பினருமான இரா.துரைரெத்தினம் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று(09) கருத்துதெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் மாகாணசபைக்கென வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் உள்ள உயர் திணைக்களங்களான கல்வி, சுகாதாரம், உள்ளுராட்சி திணைக்களங்களாகும். இவ் மூன்று பெரிய திணைக்களங்களிலும் மத்தியஅரசின் ஆதிக்கம் தலை தூக்கியுள்ளது. இதன் காரணமாக மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மத்திய அரசினால் பறிக்கப்படுகின்றனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

2018ம்ஆண்டுகிழக்குமாகாணசபையின் சுகாதார திணைக்களத்திற்கென கிட்டத்தட்ட சுகாதார அமைச்சின் நிதியும், விசேட திட்டத்திற்கான நிதியும் மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் அண்ணளவாக 800 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. இந்த நிதி போதாது என பல முறைப்பாடுகள் மாகாணத்தில் வைத்தியத்துறைக்குள் வந்திருக்கின்ற நிலையில் மத்தியசுகாதார அமைச்சினால் அரசியல்ரிதீயாக, இனரிதியாக தமிழ் இனத்தைப் புறக்கணித்து விட்டு ஒன்பது ஆயிரம் மில்லியன் நிதியை ஒரு வைத்தியசாலைக்கு மட்டும் ஒதுக்கி விட்டு கிழக்கு மாகாணசபையை இதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனக்கேட்பதும். இவை இல்லாத பட்சத்தில் அவ் வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் விடுவியுங்கள் எனக் கேட்பதும், மத்திய அரசாங்கம் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரத்தை பறிப்பதற்கு சமனாகும். இது சிறுபான்மையினருக்குச் செய்யும் துரோகமாகும்.

இவைமட்டுமின்றி ஒரு மாகாண வைத்தியசாலையை மத்திய அரசிற்கு மாகாண ஆளுனர் அவர்கள் வழங்க முயற்சிப்பதும், அதிகாரத்தை இல்லாதொழிக்கும் செயலாகவே கருதுகின்றேன்.

கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஒரு வைத்தியசாலை மத்தியஅரசிற்கு வழங்கப்பட்டது. இதேபோல் 2018ம்ஆண்டு அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒரு வைத்தியசாலை மத்திய அரசிற்கு வழங்குதென்பது எமக்கான அதிகாரத்தை விட்டுக் கொடுப்பதற்கு சமனாகும். இவ் அதிகாரத்தை ஆளுனரால் கூட வழங்க முடியாது. அப்படி அது வழங்கப் பட்டால் இது சட்டத்திற்கு முரணான செயலாகவே நான் கருதுகின்றேன்.

நீண்டகாலமாக கிழக்கு மாகாணசபையின் சுகாதார திணைக்களத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல தமிழ் வைத்தியசாலைகள் மத்தியஅரசினால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுப்போது புறக்கணிக்கப்படுவதும்,2018ம்ஆண்டு மாகாணசபை வைத்திசாலையை மத்தியஅரசின்கீழ் கொண்டு வருவதும் இனரிதீயாக நிதி ஒதுக்கீடு செய்வதும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

எனவே மாண்புமிகு ஜனாதிபதியாகிய நீங்கள் மேற்குறிப்பிடப்பட்டுள்ள இன ரிதீயான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி கிழக்கு மாகாணத்திலுள்ள சுகாதாரத்துறை இனரீதியாக பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.