முள்ளிவாய்க்கால் யுத்தத்தை எதிர்த்து 18தமிழகமக்கள் தீக்குளித்தனர்! ஆனால் அதே தமிழ் மக்களால் எம்.பியானவர்கள் என்ன செய்தார்கள்?

பாண்டிருப்பில் த.வி.கூட்டணியின் நிருவாகசெயலாளர் சங்கையா கேள்வி!
காரைதீவு   சகா
 
இலங்கையில் இறுதிக்கட்டயுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அண்டையநாடான தமிழகத்தில் உணர்வுள்ள 18தமிழர்கள் தீக்குளித்து மாண்டார்கள். ஆனால் எந்ததமிழ்மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டார்களோ அந்த மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 22 த.தே.கூட்டமைப்பு எம்.பிக்கள் என்ன செய்தார்கள்? கடைசி அடையாள உண்ணாவிரதத்தையாவது மேற்கொண்டார்களா?
 
 
இவ்வாறு தமிழர்விடுதலைக்கூட்டணியின் நிருவாகச்செயலாளர் கே.சங்கையா பாண்டிருப்பில் நடைபெற்ற கட்சிஆதரவாளர்க்கான கூட்டத்தில் உரையாற்றுகையில் கேள்வியெழுப்பினார்.
 
கல்முனையையடுத்துள்ள பாண்டிருப்பில் தேர்தலுக்குப்பின்னரான த.வி.கூட்டணிக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர்  மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.
 
த.வி.கூட்டணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கல்முனை மாநகரசபை பிரதிமேயருமான காத்தமுத்து கணேஸ் ஏற்பாட்டில் அவரது இல்லத்தில் இக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
 
அங்குரையாற்றிய சங்கையா தொடர்ந்து பேசுகையில்:
முள்ளிவாய்யகால் யுத்தத்தை இன்னும் உலகம் மறந்துவிடவில்லை. 
 
கண்ணகி  தனது கணவன் கோவலனை  விசாரணையின்றி நீதிக்கு விரோதமாகக் கொன்ற பாண்டிய மன்னனிடம் நீதிகேட்டதோடு மாத்திரம் நிற்கவில்லை. மாறாக அதனை  வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மதுரை மாநகரையும் எரித்தாள்.
அதுபோல முள்ளிவாய்க்காலில் அப்பாவி தமிழ்மக்கள் கொன்றதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்த த.தே.கூட்டமைப்பின் 22 எம்.பி.க்களை தமிழ் மக்கள் மீண்டும் தெரிவுசெய்வதா? 
புலிகளால் தமிழ்மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். எனவே புலிகளையும் இரணுவத்தைப்போல் விசாரணை செய்யவேண்டும் என்று கூறியவர்தான சுமந்திரன் எம்.பி. இந்தநிலையில் அரசியல்கைதிகளை விடுவிக்கவேண்டும் என அவர்கள் எவ்வாறு கோரமுடியும்?
 
தமிழினம் பெரும்பான்மையாகவுள்ள மட்டக்களப்பு மாவட்டம் இன்று பல வழிகளிலும் சுருங்கிவருகின்றது. 3 த.தே.கூட்டமைப்பு எம்.பிக்களிருந்தும் சகல வசதிகளும் அபிவிருத்திகளும் வேறொரு பிரிவினருக்கு அள்ளிக்கொடுக்கப்படுகின்றது. அவர்கள் வெறுமனே ஊடகங்களுக்கு தீனிபோடும் வேலையை மட்டும் செய்துகொடுக்கிறார்கள்.
 
மொத்தத்தில் மட்டு.மாவட்டம் பல வழிகளாலும் சுருங்கிவருகின்றது. ஆனால் த.தே.கூட்டமைப்பு எம்.பிக்களின் வசதிவாய்ப்புகள் மாத்திரம் அதிகரித்துவருகின்றது. இனியாவது மக்கள் விழிப்படையவேண்டும். என்றார்.