மக்களின் காலடிக்குச்சென்று தேவைகளையறிந்து சேவைசெய்யதீர்மானம்:

மக்கள் மத்தியில் குழுக்கள் அமையும்: உறுப்பினர்கள் களப்பயணம்!
காரைதீவு பிரதேசசபை தவிசாளர் உறுப்பினர்கள் இணைந்து கலந்துரையாடல்!
காரைதீவு  சகா

 
காரைதீவின் ஒவ்வொரு வட்டாம் வட்டாரமாக மக்களின் காலடிக்குச்சென்று தேவைகளையறிந்து சேவைசெய்யவும் அவர்கள்  மத்தியில் தேவiயான ஆலோசனைக்குழுக்களை அமைத்து காரைதீவை அபிவிருத்தி செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் மற்றும் 10உறுப்பினர்களும் இணைந்து ஒருமித்துக்கலந்துரையாடியபோது மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
 
தவிசாளரின் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மனந்திறந்து பல கருத்துக்களை வெளியிட்டனர்.
 
பிரதேசசபைக்கான வளங்கள் தொடர்பாக ஒவ்வொரு உறுப்பினரும் அறிந்திருக்கவேண்டும் . எனவே அவற்றை அறியவேண்டும் என்பதற்காக ஒரு களப்பயணத்தை ஒருநாள் மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.
 
அது மட்டுமல்ல தவிசாளர் உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்களது வீடுகளை அனைத்து உறுப்பினர்களும் அறியவேண்டும். அவர்களது குடும்பத்தாரையும் அறியவேண்டும் என்றநோக்கில் களப்பயணத்தின்போது அவர்களது வீடுகளுக்கு விஜயம் செய்வது என்றும் தீர்மானமாகியது. இது  பரஸ்பரம் உறவுகளை வலுப்படுத்த உதவும் என்று நம்பப்படுகின்றது.
 
ஒவ்வொரு வட்டாரத்திற்கும் அந்தந்த வட்டாரத்தில் தெரிவான உறுப்பினர்களே சகல குழுக்களுக்கும் பொறுப்பாகவிருப்பார்கள். அவர்கள் ஒவ்வொரு வட்டாரமாக தவிசாளர் முன்னிலையில் மக்கள் ஒன்று கூடலை நடாத்தி தேவைகளை அறிந்து அவற்றை முன்னுரிமை அடிப்படையில் பட்டியல்படுத்தி அனைவரது ஒத்துழைப்புடனும் முன்னொண்டு செல்வது என்றும் முடிவானது.
 
இதற்கு அனைத்து உறுப்பினர்களதும் பூரண ஆதரவு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.