அதிகாரப்பகிர்விற்கான  புதிய அரசியல் யாப்பு  எந்தளவிற்கு சாத்தியம்  என்பதை  எவராலும்  கூற முடியாதுள்ளது –

இன்று இந்த அரசு முகங்கொடுத்துள்ள தொடர் பிரச்சினைகள் குறித்து நாம் நன்றாக அறிவோம். பொருளாதாரப்பிரச்சினை என்பது இன்னும் எத்தனைக் காலத்திற்கு நெருக்கடி நிலையில் தொடருமோ தெரியாது. எந்தத் துறையில்பிரச்சினை இல்லை எனக் கூற இயலாத வகையில், எல்லாத்துறைகளும் சார்ந்து பிரச்சினைகளுக்கு மேல்பிரச்சினைகளாகவே தொடரும் நிலையில் இந்த நாடு இருந்து வருகின்றது. இந்த நிலையில் அதிகாரப் பகிர்விற்கானபுதிய அரசியல் யாப்பு எந்தளவிற்கு சாத்தியம் என்பதை எவராலும் கூற முடியாதுள்ளது. என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிதுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கொள்கை விளக்க உரை பற்றிய சபைஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

வெறுமனே அரசிலுக்காக இந்த வருட தைப் பொங்கலைக் கொண்டாடிக் கொண்டு, அடுத்த தைப் பொங்களில், இந்தவருட சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டு, அடுத்த சித்திரைப் புத்தாண்டில், இந்த வருட தீபாவளியைக்கொண்டாடிக் கொண்டு, அடுத்த வருட தீபாவளியில் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்றோ, இந்தவருடத்திற்குள் அரசியல் தீர்வு கிடைக்காவிட்டால், பயங்கர விளைவு ஏற்படும் என்றோ, சர்வதேசம் பார்த்துக்கொள்ளும் என்றோ எமது மக்களை ஏமாற்றிக் கொண்டு காலங்கடத்த முடியாது.

அதிகாரப் பகிவு தொடர்பில் புதியதொரு அரசியல் யாப்பினை வகுத்துக் கொண்டு, மக்கள் அபிப்பிராயவாக்கெடுப்புக்குப் போனால், விளைவு என்னவாகும் என்பது குறித்து யதார்தபூர்வமாக சிந்திக்கின்றவர்கள்நன்கறிவார்கள்.

அதிகாரப் பகிர்வு குறித்த நல்லெண்ண கருத்துக்களை இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் சுமுகமாகக்கொண்டு செல்வதில் எந்தத் தரப்பினரும் இதுவரையில் வலுவான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றே தெரியவருகின்றது. எனவே, தென் பகுதி மக்களில் பெரும்பாலானவர்களை கடந்த கால கசப்புணர்வுகளிலிருந்தும்,சந்தேகங்களிலிருந்தும் மீட்க முடியாதுள்ள நிலையே தொடர்கின்றது. இந்த நிலைப்பாட்டினை மேலும் உரம் போட்டுவளர்க்கின்ற கைங்கரியங்களை பேரினவாத இனவாத சக்திகள் மிகவும் திட்டமிட்ட வகையில் மேற்கொண்டுவருகின்றன. இதற்கு தேவையான சூழலை தமிழ்த் தரப்பு சுயலாப அரசியல்வாதிகள் சிலரும் வலிந்த உருவாக்கிவருகின்றனர் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.