ஓட்டமாவடி தவிசாளருக்கும் நீர்வழங்கல் சபையின் அதிகாரிகளுக்குமிடையில் கலந்துரையாடல்

ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நீர்வழங்கல் சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான வேலைகளின் போது வீதிகள் திட்டமிடப்படாத நிலையில் உடைக்கப்பட்டு சேதமாக்கப்படுவதனை கவனத்திற் கொண்டு இதற்கான உரிய தீர்வினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் இத்திட்டத்திற்குரிய நீர்வழங்கல் சபையின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ. அமிஸ்டீம் (அஸ்மி) தலைமையில் ஓட்டமாவடி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல்;, பிரதேச சபையின் சார்பாக செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம், பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.அக்பர் உட்பட சபையின் உத்தியோகத்தர்களும் மற்றும் நீர் வழங்கல் சபையின் சார்பாக பிராந்திய அலுவலக பொறுப்பதிகாரி எஸ்.மாறன், உத்தியோகத்தர் எம்.நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் நீர்வழங்கல் சபை ஆகிய இரு தரப்பினரது சார்பிலும் பங்கு கொண்ட அதிகாரிகளுடனான இக்கலந்துரையாடலில் போது குறித்த குடிநீர் விநியோகத்திட்டம் அமுல்படுத்தப்படுவது தொடர்பாக பிரதேச சபையுடன் முறையான ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டிருத்தல் வேண்டும். எனினும் இவ் ஒப்பந்தம் செய்யப்படாமையினால் அதனை உடனடியாக செய்து முடித்தல்.

இத்திட்டம் தொடர்பான கால அட்டவணையுடன், முழுமையான திட்ட வரைபடத்தினை நீர்வழங்கல் சபை பிரதேச சபைக்கு அவசரமாக சமர்ப்பித்தல் வேண்டும்., இத்திட்டத்திற்காக வீதிகள் உடைக்கப்பட்டு தோண்டப்படும் போது வீதியின் பாகங்கள் ஒழுங்கான முறையிலும் பாதுகாப்பான வகையிலும் அப்புறப்படுத்தப்படுவதனை சிறந்த மேற்பார்வையுடன் செய்வதற்கு நீர்வழங்கல் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோண்டப்பட்டுள்ள வீதிகளை திருத்தம் செய்வதற்கு ஏற்றதாக குடிநீர் விநியோகத்திற்கான குழாய்கள் பதிக்கும் வேலைகள் முடிவுற்றுள்ள வீதிகளில் குழாய் இணைப்பைப் பெற விரும்புபவர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கி இவ்வேலைகளை முடிவுறுத்துவதற்கு நீர்வழங்கல் சபையினால் பொதுமக்களுக்கான பொது அறிவித்தல் விடுத்தல். அத்துடன், அனைத்து வேலைகளும் முடிவடைந்த பின்னர் குழாய் இணைப்பைப் பெறுபவர்களால் வீதிகளை உடைத்து திருத்தம் செய்வதற்கான அறவீட்டுத் தொகையை உரிய நிறுவனத்தினால் அறவிடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதனை அறிவுறுத்தல்.

பிரதேச சபையின் ஏற்பாட்டில் பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகளது பங்குபற்றுதலுடன் நீர்வழங்கல் சபையின் அதிகாரிகள் மற்றும் கோறளைப்பற்று மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட பொது நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்களைச் சந்தித்து நீர்வழங்கல் சபையின் குறித்த குடிநீர் விநியோகத்திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் விஷேட கலந்துரையாடல் ஒன்றினை அவசரமாக நடாத்துதல் ஆகிய விடயங்கள் தீர்மானமாக மேற்கொள்ளப்பட்டன.

இக்கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவித்த தவிசாளர் ஐ.ரீ.அமிஸ்டீம் (அஸ்மி)

தற்போது சுத்தமற்ற குடிநீரை பருகுவதால் சிறுவர்கள் உட்பட நம்மில் பெரும்பாலானோர் பல வகையான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அதனால் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன. குறித்த குடிநீர் விநியோகத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். அத்துடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு சகல வழிகளிலும் முயற்சி செய்த அனைவரையும் எமது மக்கள் சார்பாக பாராட்டுகின்றேன்.

மேலும் இத்திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கும், இதன் பயன்கள் மக்களைச் சென்றடைவதற்கும் என்னாலான உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு என்றும் தயாராக உள்ளேன். எனினும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நீர்வழங்கல் சபையானது சரியான திட்டமிடல் இல்லாது வீதிகளை உடைப்பதனால் பொது மக்களிடத்தில் பிரச்சினைகள் எழுந்து அவை எமது பிரதேச சபைக்கு பாதிப்பினை ஏற்படுத்துமாயின் அதனை நீர் வழங்கல் சபையே பொறுப்பேற்க வேண்டும் எனவும் உறுதிப்படத் தெரிவித்தார்.