எவர் என்னை தடுத்தாலும், எம்மண்ணின் மீதும் மக்கள் மீதும் நான் கொண்ட பற்றை வேரறுக்க நீங்கள் விடமாட்டீர்கள் .பிள்ளையான்

எவர் என்னை தடுத்தாலும், எம்மண்ணின் மீதும் மக்கள் மீதும் நான் கொண்ட பற்றை வேரறுக்க நீங்கள் விடமாட்டீர்கள் என்ற வேட்கையோடு விலங்குடைத்து வெளியில் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தின நிகழ்வு வாழைச்சேனை கருணைபுரம் குழந்தை யேசு மைதானத்தில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற போது தலைவர் சி.சந்திரகாந்தனின் உரையினை செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் என்.திருநாவுக்கரசு கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவிக்கப்பட்டது.

அங்கு தலைவர் சி.சந்திரகாந்தனின் உரையினை செங்கலடி பிரதேச சபை மேலும் தெரிவிக்கையில்-

ஊனையும் உயிரையும் உரமாக்கி உலகிலே தாம் உத்தமர்கள் என தம்மை நிலைநாட்டி, பிறர்வாழ தம்மை முழுமையாக அர்ப்பணித்த உழைப்பாளி பெருமக்களின் உன்னதமான இத்தியாகத் திருநாளிலே உங்களுடன் உரையாடுவதில் உளமார மகிழ்கின்றேன்.

ஒரு மெழுகுவர்த்தியானது எவ்வாறு தன்னை அழித்து பிறர்க்கு ஒளி கொடுக்கின்றதோ? அதே போன்று ஒரு வெண்கட்டி ஆனது தன்னையே முழுமையாக இழந்து கற்றல் செயற்பாட்டில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து தான் அழிந்தும் பிறரை அறிவுப் புரட்சியை நோக்கி உயர்த்துகின்ற அந்த புனிதமான, அதாவது தன்னிலை பாராது பிறர் நலன் பேணுகின்ற மெழுகுவர்த்தி மற்றும் வெண்கட்டி போன்று நாம் எல்லாம் நிலையான நிம்மதியாக வாழ தங்களின் முழுமையான அர்ப்பணிப்பையும் வழங்கி உலகிலே உன்னதமான மனிதர்கள் என்று தங்களை நிலைநிறுத்திய தொழிலாளர்கள் தினம் மே – 01இல் உலகளாவிய ரீதியில் கொண்டாடுகின்ற இப்புனித நாளை இலங்கையில் நாம் இன்று கொண்டாடுகின்றோம்.

இந்நாளிலே மக்கள் நலன், சமூக மேம்பாடு, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள், கல்வி அபிவிருத்தி, அரசியல் அபிலாசைகள், வேலையில்லாப் பிரச்சினைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, இந்நாட்டிலே புரையோடிப் போயுள்ள கடந்த கால யுத்த வடுக்களை எல்லாம் மக்கள் மனதிலிருந்து விலக்கி, எமது சமூகம் கடந்த காலங்களில் எதிர்நோக்கிய இழப்புக்களிலிருந்து மீண்டு நிம்மதியான ஒரு முன்னேற்றகரமான வாழ்க்கையை தேடிக் கொடுப்பதற்கும், நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தியை நிலை நாட்டுவதற்கும், உரிமைகள் மறுக்கப்படும் போது அதனை உரியவகையில் அணுகி பெற்றுக் கொடுப்பதற்கான வழிகளைத் தேடுகின்ற ஓர் பொறுப்புமிக்க அரசியல் கட்சியை தலைமையேற்று வழி நடத்துகின்றவன் என்ற வகையிலும் இக்கிழக்கு மண்ணின் மீதும் மக்களின் மீதும் தீராத பற்றுக் கொண்டவன் என்ற வகையிலும் இந்நாளிலே எனது உள்ளத்திலே உதிக்கின்ற எண்ணங்களை எடுத்து இயம்புவதற்கு ஏற்ற தருணமாக நான் இதனைக் கருதுகின்றேன்.

இவ் உழைப்பாளர் தினத்தை எல்லா அரசியல் கட்சிகளும் கொண்டாடுகின்றன என்ற வரையறையையும் தாண்டி எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது உண்மையான உழைப்பாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது தியாகங்களுக்கு தலைவணங்கி இந்நாளை அனுஸ்டிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

எமது மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகள் என்னால் இனங்காணப்பட்;டுள்ளன. அந்த வகையில் கல்வி, கலாசாரம், பொருளாதாரம், வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, அரசியல் அபிலாசைகள், மக்களின் நிம்மதியான வாழ்வுடன் கூடிய எதிர்பார்ப்புக்கள் நில, நிர்வாக கட்டமைப்புக்களைப் பேணுதல், உட்கட்டுமான வசதிகளின் மேம்பாடு, அதிகாரப் பரவலாக்கம் மற்றும் இன்னோரன்ன பல பிரச்சினைகளுக்கு ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு எப்படியான நகர்வுகளை மேற்கொள்ள இருக்கின்றேன் என்கின்ற செய்தியை இத்தருணத்தில் கூறுவதென்பது சாலப்பொருந்தும் என எண்ணுகின்றேன்.

கடந்த காலத்தில் நான் கிழக்கின் முதல் முதல்வராக இருந்த போது, கிழக்கில் வாழுகின்ற மக்களின் நலன்சார்ந்து என்னால் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அமைந்ததையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

விசேடமாக கிழக்கு வாழ் மக்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்று அரசியல் அந்தஸ்தை அடைந்தவன் என்ற வகையில் அம்மக்களைச் சார்ந்து பல நலன்புரித் திட்டங்களை வழங்கி இருந்ததனை நீங்கள் யாவரும் அறிவீர்கள்.

ஒரு அரசியல் கட்சியானது வெறுமனே தங்களுக்கான அரசியல் செயற்பாடுகளுடன் மாத்திரம் நின்று விடாது, மக்கள் நலன்சார்ந்த பல திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனும் நோக்கின் அடிப்படையில் நான் செயற்பட்டதை இக்கிழக்கு மண் நன்கறியும்.

என்னுடையதினும் எனது கட்சியினதும் எம்மக்களினதும் எண்ணங்களை என்றாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கபட நோக்கம் கொண்ட நாகரீகமற்ற அரசியல் தலைமைகளின் செயற்பாட்டினால் எமது பயணத்தைத் தடுப்பதற்கான வழிகளை மேற்கொண்டு அதிலே அவர்கள் வெற்றி கொண்டதாக இறுமாப்பு எய்தியதையும் நானும், என்னை நேசிக்கின்ற மக்களும் மறுப்பற்கில்லை.

எவர் என்னை தடுத்தாலும், எம்மண்ணின் மீதும் மக்கள் மீதும் நான் கொண்ட பற்றை வேரறுக்க நீங்கள் விடமாட்டீர்கள் என்ற வேட்கையோடு விலங்குடைத்து வெளியில் வரும் வெகு தொலைவில் இல்லை.

பட்டதாரிகள், உயர்தரம், சாதாரண தரம் கற்ற இளைஞர், யுவதிகளோடு, பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைப் பலப்படுத்தி, கல்வி கற்காத இளைஞர், யுவதிகளையும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு, கிழக்கில் காணப்படுகின்ற சகல வளங்களையும் நாம் சீராக பயன்படுத்தி சிறப்பானதொரு கட்டமைப்பு மிக்கதான சமுதாயத்தை கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்பு எமது அரசியல் கட்சியைச் சார்ந்தது. இக்கட்சிக்கு தலைவர் என்ற வகையில் இவ்விடயங்களை நான் முன்னெடுத்துச் செல்வேன் என்பதை உறுதியளிக்கின்றேன்.

கிழக்கின் ஜனநாயகத்தின் திறவுகோலான எம்மை நம்பி எமது கட்சிக்கு ஆதரவு நல்கிய கடந்த பிரதேச சபைத் தேர்தலிலே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி எமது கட்சி வெற்றி பெற பல வகையிலும் ஒத்தாசை நல்கிய என் உயிரிலும் மேலான அனைத்து உறவுகளுக்கும் இந்நன்நாளிலே நன்றி கூறக் கடமைப்பட்டிருகின்றேன்.