பிள்ளையான் வெளியில் வந்ததும் அனைத்து தமிழ் உள்ளுராட்சி மன்றங்களையும் கைப்பற்றுவோம்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் வெளியில் வந்ததும் எதிர்வரும் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ் உள்ளுராட்சி மன்றங்களையும் கைப்பற்றுவோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் என்.திருநாவுக்கரசு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தின நிகழ்வு வாழைச்சேனை கருணைபுரம் குழந்தை யேசு மைதானத்தில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிறையில் இருந்தாலும் அவரது வாரிசுகளால் இந்த மண்ணில் அரசியல் நிகழ்த்த முடியும் என்கின்ற உயரிய நோக்கத்தை வழங்கியிருக்கின்றார்கள் எங்களது தலைவர்.

அந்த அடிப்படையில் இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு தமிழர்களும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை பலப்படுத்த வேண்டிய தார்மீக கடமையும், பொறுப்பும் இருக்கின்றது.

உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கிலுள்ள டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்தும் ஆட்சி அமைக்க முடியும் என்று சொன்னால், கிழக்கிலுள்ள கருணா அம்மானுடன் இணைந்தும் ஆட்சி அமைக்க முடியுமா இருந்தால் சந்திரகாந்தனை இணைந்து ஆட்சியமைக்க முடியாது.

மட்டக்களப்பை சேர்ந்த ஒருவன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியை அமைத்து அரசியல் செய்கின்றார். வடக்கு தலைமைகளுக்கு சவாலாக இருப்பான் என்ற ஒரு குறுகிய நோக்கத்தினால் எங்களை உடைக்க வேண்டும் என்கின்ற காற்புணர்ச்சி அவர்களுக்குள் எழுந்திருக்கின்றது.

அந்த வகையில் எங்களை நயவஞ்சகமாக பல இடங்களில் தோற்கடித்தார்கள். நாங்கள் கௌரவமாக தோற்று வெளியில் வந்திருக்கின்றோம். வாழைச்சேனை பிரதேச சபையை வெற்றி பெற்றுள்ளோம். அதன் மூலம் மக்களுக்கு பல சேவைகளை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.