தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியில் மட்டக்களப்பில் மீன்கள் கூட ஓடி ஒழிந்து விட்டது.பூ.பிரசாந்தன்

சந்திரகாந்தன் பெரிய கட்சிகளின் அரசியல் புலத்திற்கு அடிமையாகி, அடிவருடிகளாக அவர்கள் பக்கம் சென்றிருந்தால் சிறையில் இருந்திருக்க மாட்டார் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தின நிகழ்வு வாழைச்சேனை கருணைபுரம் குழந்தை யேசு மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் மூன்று வருடங்களாக சிறையில் இருக்கின்றார். எந்தக் கட்சிக்கோ அல்லது பெரிய கட்சிக்கோ, அரசியல் புலத்திற்கோ அடிமையாகி, அவர்களுக்கு அடிவருடிகளாக அவர்கள் பக்கம் சென்றிருந்தால் சிறையில் இருக்கமாட்டார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்தார் விளையாட்டாக வேலையில்லாதவர்கள் ஆரம்பித்த போராட்டம் வீரப் போராட்டமாக மாறியது. போராட்டத்தில் சம்மந்தப்பட்டவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்கள். தங்களை பாதுகாக்க கடத்தல்கள், பல்வேறு கொலைகள் செய்தவர்கள் சிறையில் இருக்கின்ற போது எவ்வாறு விடுதலை செய்வது. அரசியல் கைதிகள் சம்பந்தமாக நாங்கள் சிந்திக்க வேண்டும்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டுமாக இருந்தால் விடுதலைப் புலிகள் செய்த போர்க்குற்றமும் விசாரிக்கப்பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார். அவ்வாறு தங்களுக்குள்ளே பல்வேறு குழப்பகரமான செய்திகளையெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இன்று விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு தேர்தல் காலங்களில் உரிமை கொண்டாடுவார்கள்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் இருக்கின்ற தொகுதி படுதோல்வியடைந்திருக்கின்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. உண்மை ஜெயித்திருக்கின்றது என்ற செய்தியை மக்கள் காட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உழைக்கும் வர்க்கம் உழைத்துக் கொண்டே இருக்கின்றது. சுரண்டும் வர்க்கம் சுரண்டிக் கொண்டே இருக்கின்றது. தற்போது பொருட்களின் விலைகள் ஏறிக் கொண்டே செல்கின்றது. நல்லாட்சிக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற தமிழ் தேசியம் பேசுகின்ற யாராக இருந்தாலும் அவர்களிடத்தில் போய் சொல்லட்டும்.

வடக்கு கிழக்கிலே தமிழினத்தை கேட்டோம் இன்று அடுப்பில் பூனை உறங்குகின்றது. சமைப்பதற்கு அடுப்பில்லாமல் பெண்கள் அடி வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு குழந்தைகளுக்கு உணவு வழங்க முடியாமல் மாற்று சமூகத்தின் கடைகளில் நூறு இறுநூறு ரூபாய்களுக்கு தடுமாறி பல்வேறு இம்சைகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள். பெண்கள் துஸ்பிரயோகம் அதிகரிக்கப்படுகின்றது. இதற்கு காரணம் தமிழ் தேசிய பேசுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு பொறுப்பேற்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன் உற்பத்தி 2009ம் ஆண்டு 238 இலட்சம்கிலோ கிராமாக இருந்தது. ஆனால் 2012ம் ஆண்டு சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் 459 இலட்சம் கிலோ கிராம மீன் உற்பத்தி இருந்தது. ஆனால் கிழக்கு மாகாண சபையில்; இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராசசிங்கம் பொறுப்பெடுத்ததன் பிற்பாடு 2016ம், 2017ம் வருடம் மீன் உற்பத்தி 270 இலட்சமாக குறைந்து விட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியில் கூட மீன்கள் ஓடி ஒழிந்து விட்டது.

வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தை ஏற்றுக் கொள்ளாத கட்சிகளுடன் பேசுவதில்லை என்று கூறிப்பிட்டார்கள். யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பியின் மே தினக் கூட்டம் நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார். நாங்கள் உள்ளுராட்சி சபையில் வெற்றி பெற்று 36 ஆசனங்களை பெற்ற போது தமிழர் பிரதேசத்தை தமிழன் ஆளவேண்டும் சேர்ந்து ஆட்சியமைப்போம் என்று அழைத்தோம். ஆனால் எந்த பதிலும் இல்லை.

வடக்கு கிழக்கை பிரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த கட்சி ஜே.வி.பி, இவர்களின் வழக்குத் தாக்குதலின் அடிப்படையில் வட கிழக்கு பிரிக்கப்பட்டது. அப்படியானால் ஜே.வி.பி வடக்கு கிழக்கு பிரித்ததை நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளீர்களா? அதனால் தான் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தாரா? இதற்கு பதில் வழங்கட்டும்.

எதிர்கட்சி தலைவருடன் சேர்ந்து இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சொல்லுகின்ற ஒவ்வொரு விடயங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் செய்வதற்கு ஆயத்தமாக இருக்கின்ற வேளையில் சிறையிலுள்ள அரசியல் தைகதிகளை விடுதலை செய்வதற்கான கோரிக்கைகளை ஏன் முன்வைக்க முடியாது என்றார்.