வெட்கமில்லையா?வெள்ளிமலை

யுத்தத்தில் 1லட்சத்து45ஆயிரம் தமிழ்மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் : அப்போது 22த.தே.கூ.எம்.பிக்களில் ஒருவராவது உண்ணாவிரதம் இருந்தனரா?
த.வி.கூட்டணிக்கூட்டத்தில் முன்னாள் எம்.பி. வெள்ளிமலை கேள்வி!
காரைதீவு நிருபர் சகா

கடந்த யுத்தத்தில் 1லட்சத்து45ஆயிரம் தமிழ்மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின்போது த.தே.கூட்டமைப்பின் 22 எம்.பிக்கள் கனடாவிலும் இந்தியாவிலும் லண்டனிலும் கொழும்பிலும் வாழாவிருந்தனர்.

இந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் அப்பாவி தமிழ்மக்கள்கொல்லப்படுகிறார்களே என்று அதற்கெதிராக அவர்களில் யாராவது ஒருவராவது உண்ணாவிரதம் இருந்தனரா? இன்று எந்த முகத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்ட்டிக்கத் தயாராகிறார்கள்? வெட்கமில்லையா?

இவ்வாறு கேள்வி எழுப்புகிறார் தமிழர்விடுதலைக்கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) .

கல்முனையையடுத்துள்ள பாண்டிருப்பில் தேர்தலுக்குப்பின்னரான த.வி.கூட்டணிக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதான உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

த.வி.கூட்டணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கல்முனை மாநகரசபை பிரதிமேயருமான காத்தமுத்து கணேஸ் ஏற்பாட்டில் அவரது இல்லத்தில் இக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் த.வி.கூட்டணியின் நிருவாகச் செயலாளர் கே.சங்கையா கல்முனை மாநகரசபை உறுப்பினர் திருமதி சுமித்ரா ஜெகதீசன் த.வி.கூட்டணியின் தீவிரஆதவாளர் டாக்டர் கி.அருணன் உள்ளிட்ட ஆதரவாளர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பதிவுசெய்தனர்.

அங்குரையாற்றிய வெள்ளிமலை தொடர்ந்து பேசுகையில்:

1977 இலிருந்து 2004 வரை த.வி.கூட்டணி கொடி கட்டிப்பறந்தது. உதயசூரியன் சின்னம் தமிழ்மக்கள் மனங்களில் இதயத்தாமரையாகவிருந்தது. தந்தை செல்வா வழிவந்த கட்சி த.வி.கூட்டணி என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டுமென்பதற்காக அன்றைய தமிழ்த்தலைவர்களான தந்தைசெல்வா ஜி.ஜி.பொன்னம்பலம் சௌ.தொண்டமான் கே.டபிள்யு.தேவநாயகம் போன்றேரெல்லாம் சேர்ந்துருவாக்கிய கட்சி இது.

1977இல் த.வி.கூட்டணி சார்பில் 18எம்பிக்கள் தெரிவானார்கள். அண்ணன் அமிர்தலிங்கம் வரலாற்றில் தமிழ் எதிர்க்கட்சித்தலைவராகத் தெரிவானார்.

பின்னர் 2004இல் புலிகளின் ஆதரவோடு த.தே.கூட்டமைப்பு எனும் பெயரில் 22பேர் தெரிவாகியதைத் தொடர்ந்து தமிழினத்திற்கு சாபக்கேடு தலைதூக்கியது.
இன்று த.தே.கூட்டமைப்பின்
ஒருங்கிணைப்புக்குழுவைக்கூட்டுவதற்கு அதிலுள்ள ஒரு தலைவர் மற்றத்தலைவருக்கு கடிதம் எழுதவேண்டிய துர்ப்பாக்கியநிலை. அதனை ஊடகங்களில் போடவேண்டிய நிலையில் அவர்கள். இதுதான் அவர்களது ஜனநயாகம்.

ஏமாற்றிப்பிழைக்கும் அரசியல்!
உள்ளத்திலே ஒன்று உதட்டிலே ஒன்று. அவர்கள் ஈழம் வடக்கு கிழக்கு இணைப்பு புதியயாப்பு சுயநிர்ணயம் என்ற வார்த்தைகளைக்கூறி மக்களை ஏமாற்றிவந்தனர்.

85வீதமான பாமர மக்களை ஏமாற்றி 15வீதமான படித்த அல்லது பணக்கார வர்க்கம் ஆண்டுகொண்டிருக்கிறது. தேர்தல் காலத்தில் வேட்டியுடன்வந்து பொய்வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளைச்சுருட்டுவார்கள். பின்னர் மக்களை மறந்துசெயற்படுவார்கள்.

ஜெனீவா சர்வதேசம்என்று மக்களை ஏமாற்றிவந்து இறுதியில் சர்வதேச பொறிமுறைக்குள் இலங்கையை தண்டிக்கமுடியாது என்று சுமந்திரன் எம்.பி.கூறுகின்றார். இந்தப் பித்தலாட்டத்தை இன்னும் மக்கள் நம்பவேண்டுமா?
கொடி கட்டிப்பறந்த தமிழினம் குந்தியிருக்க ஒரு நாடு இல்லை. மாற்றினம் வாழவேண்டும் தமிழன் தாழவேண்டும் மாற்றினமே வாழு வாழு தமிழினமே தாழு தாழு என்பது அவர்களது தாரக மந்திரமாகும்.

தியாகிகளும் துரோகிகளும்!
அவர்கள் ஆட்சியயைப்பிடிக்க யாருடனும் கூட்டுச்சேரலாம். அவர்களுக்குப்பெயர் தியாகிகள். த.வி.கூட்டணி கல்முனையில் சேர்ந்தால் துரோகிகள். இது என்ன நியாயம்?

கூட்டிக்கொடுத்தவனுடனும் காட்டிக்கொடுத்தவனுடன் அவர்கள் சேர்ந்து ஆட்சியமைக்கலாம். அது பிரச்சினையில்லை. அவர்கள் தியாகிகள். நாம் சேர்ந்தால் துரோகிகள்.

அப்போது தமிழரசுக்கட்சிச் செயலாளரின் மண்டையைக் கொத்தியவனுடன் இன்று யாழ்ப்பாணத்தில் கூட்டுச்சேர்ந்து ஆட்சியமைக்கலாம். சிங்கள பெரும்பான்மையினம் துரோகிகள் என்றெல்லாம் மேடைகளில் தொண்டைகிழியக்கத்தி வெறுப்பேற்றிய ஸ்ரீல.சு.கட்சியுடன் ஜ.தே.கட்சியுடன் ஆட்சியமைக்கலாம். ஏன் கிழக்கில் தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகளைக்கருவறுக்கும் ஸ்ரீல.மு.காவுடன் சேர்ந்து பொத்துவில் காரைதீவு நாவிதன்வெளிப்பிரதேசங்களில் சேர்ந்து ஆட்சியமைக்கலாம். அப்போதெல்லாம் அவர்கள் தியாகிகள்.

இங்கு காத்தமுத்து கணேஸ் சேர்ந்தால் துரோகி. இதே வேளை ஹென்றி சேர்ந்தால் அவர் தியாகி. யாருக்கு கதை அளக்கிறார்கள்? அந்தக்காலம் மலையேறிபோய்விட்டது.
மொத்தத்தில் தமிழினத்தை தாரை வார்த்த பங்கு இந்த த.தே.கூட்டமைப்பினருக்கே உண்டு. இவர்களிருக்கும்வரை தமிழினத்திற்கு விமோசனம் இல்லை. என்றார்.

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலை முகங்கொள்வது தொடர்பாகவும் அங்கு பலரது கருத்துக்களும் பெறப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டது.