2020இல் புதிய அரசாங்கமொன்றை அமைக்க சிலர் பகல் கனவு காண்கின்றனர்.

2020இல் புதிய அரசாங்கமொன்றை அமைக்க சிலர் பகல் கனவு காண்கின்றனர். தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துபவர்களோடும், ஏழ்மை, வறுமையை ஒழிப்பவர்களோடும், புத்திஜீவிகள் இருக்கும் இடத்திலும் நாம் இருப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு செங்கலடி மாவடிவேம்பில் இன்று திங்கட்கிழமை( 07.5.2018)  பிற்பகல் 3.00 மணியளவில் மே தினக்கூட்டம் இடம்பெற்றது.மேதினக் கூட்டத்திற்கு பெருந்திரளான மக்கள் வருகைதந்தார்கள்.மும்மத அனுட்டானங்கள்,ஆசீர்வாதம் பேச்சுக்கள்,இடம்பெற்றது.

‘தேசிய ஒற்றுமைக்காக  தொழிலாளர் பலம்’ என்ற கருப்பொருளின் கீழ் அனைத்து மாகாணங்களில் இருந்தும் வருகைதந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மே தின கூட்டம் நடைபெற்றது.

ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட உழைக்கும் மக்களின் சலுகைகள் பலவற்றை வென்றெடுத்தது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாகும்.

நாடுபூராகவும் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களான நிமால் சிறிபாலசில்வா,எஸ்.பீ.திசாநாயக்க,மஹிந்த அமரவீர,எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா,ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய,ஸ்ரீயாணி விஜயவிக்கிரமிங்க,பைசர் முஸ்தபா,தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா,வடமாகாண ஆளுநர் ரெயினே குரே, பிரதியமைச்சர்கள்,முன்னாள் பிரதாமர் டீ.எம்.ஜயரெட்ண,முன்னாள் அமைச்சர்கள் ஆளுநர்கள்,முதலமைச்சர்கள்,மாவட்ட அமைப்பாளர்கள்,பிரதேச அமைப்பாளர்கள்,மதத்தலைவர்கள்,உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.

ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்

தேவலோக கற்பனை கதைகளை பற்றி எல்லோருக்கும் பேச முடியும். ஆனால், அவர்களுக்கு மக்களின் துக்கத்தை, மனசாட்சியை புரிந்துகொள்ள முடியவில்லை. இந்நாட்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக சரியாக புரிந்துகொள்ள வேண்டும். அரசாங்கத்தை நடத்துபவர்கள், அரசாங்கத்தை நடத்த முயற்சிப்பவர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டை கட்டியெழுப்ப சர்வதேசத்தின் உதவி எமக்கு உண்டு. சர்வதேசம் எம்மை நம்புகின்றது. அந்த நம்பிக்கை ஊடாக நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும். அதனை வைத்துக்கொண்டு இந்த நாட்டு மக்களின் பிரச்சினையை தீர்த்து, அரசியல்வாதிகள் பொய் கூறாமல் சேவை செய்யவேண்டும்.

கள்வர்கள் யாரென எல்லோருக்கும் தெரியும். நாம் சோரம் போய்விட்டோம் என சிலர் கூறுகின்றனர். நாம் சோரம் போகவில்லை. எமது கட்சியை மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சியாக மாற்றியமைப்போம். அதன் மூலம் பலப்படுத்தப்பட்ட அரசியல் நிர்வாகத்தை உருவாக்குவோம். இந்த புதிய வேலைத்திட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.

இதேவேளைமே தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி மைத்திபால சிறிசேன கலந்து கொண்ட இலங்கை சுதந்திர கட்சியின் மே தின  பொதுக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் இலங்கை புகையிரத ஊழியர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை  முன்னெடுத்துள்ளனர்.