வாழைச்சேனை செமட்ட செவண வீடமைப்பு திட்டத்தை தவிசாளர் கவனிப்பரா?

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள செமட்ட செவன வீடமைப்பு திட்டம் முற்றுப் பெறாத நிலையில் காணப்படுகின்றது.

செமட்ட செவன வீடமைப்பு திட்டத்தின் ஊடாக கண்ணகிபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இருபத்தைந்து வீடுகளைக் கொண்ட வீடமைப்பு இடத்திற்குரிய வீதிகள் சீரின்மை காரணமாக வயல் தரை போன்று காணப்படுகின்ற.

இந்த இடமானது அரச காணி என்பதால் இத்திட்டத்திற்கான வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு இருபத்தைந்து வீடுகளைக் கொண்ட வீடமைப்பு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் மக்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்படவில்லை.

இத்திட்டத்தில் உள்ள மக்கள் தங்களுக்கு இருக்க நிரந்தர வீடு இன்மையால் இந்த வீட்டினை பூர்த்தி செய்து இங்கு வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இங்கு இவர்களுக்கு போதிய வசதி வாய்ப்புகள் எதுவும் ஒழுங்கான முறையில் செய்து கொடுக்கப்படவில்லை.

இவ்வீடமைப்பு திட்டத்திற்கு பின்னால் பாரிய மதகு ஓடையும் மற்றைய இரண்டு பக்கமும் வடிகாணுக்கு வெட்டப்பட்ட பள்ளப் பகுதியும் காணப்படுகின்றது. ஆனால் இவைகள் பூர்த்தி செய்யப்படாமல் நீர் ஆற்று நோக்கி செல்வதற்கு எந்தவித வழிகளும் இன்றி தேங்கி நிற்கின்றது.

இந்த வீட்டுத் திட்டத்தின் மூலம் இங்கு வசிப்பவர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு விட்ட நிலையில் காணப்படுகின்றது. இங்கு இவர்களால் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் முற்றுமுழுதாக பயனாளிகளின் பணத்திலேயே கட்டப்பட்டது.

அத்தோடு வாழைச்சேனை பிரதேச சபையினால் கண் துடைப்புக்காக போட்டப்பட்ட கிறவல் வீதி தற்போது வேளாண்மை செய்யக் கூடிய வயல் நிலமாகவும் காட்சியளிக்கின்றது. அரசாங்கத்தை ஏமாற்றும் வகையில் இந்த வீதிக்கு கிறவல் போடப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு இக்கிராமம் இருண்ட யுகத்தில் காணப்படுவதாகவும், இங்கு வீதி மின் விளக்குகள் பொருத்தி தருவதாகவும் கூறப்பட்டதாகவும், அதுவும் இதுவரை பொருத்தி தரவில்லைஎனவும் மக்கள் கூறுகின்றனர்.

அத்தோடு இங்கு தண்ணீர் தேங்கி காணப்படுவதால் இங்கிருந்து பெறப்படும் குடி தண்ணீரை பருகினால் பாரிய நோய்களை சந்திக்க முகங்கொடுக்க கூடிய நிலை உருவாகும்.

இங்கு வாழைச்சேனை பிரதேச சபையினால் கண் துடைப்புக்காக போட்டப்பட்ட கிறவல் வீதியினை ஒழுங்கான முறையில் செப்பனிட்டு வழங்குவதுடன், இம்மக்கள் ஒவ்வொரு வருடமும் பாதிப்படையாத வகையில் கொங்கிறீட் வீதியை அமைத்து கொடுத்தால் இதுவே நிரந்தர தீர்வாக அமையும் என்பது மக்களினது கருத்தாகும்.

மேலும் இக்கிராமத்தின் காணப்படும் வீதிகளில் மின் விளக்குகள் பொருத்தி மக்கள் மத்தியில் ஏற்படும் அச்சத்தினை போக்குவதற்கு வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றனர்.

எனவே இந்த விடயத்தில் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் உடனடியாக இக்கிராமத்திற்கு சென்று இம்மக்களின் வேண்டுகோளை நிறைவேற்ற முன்வருவாரா? மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.