இளைஞர்களின் செயற்பாடு நுனிப்புல் மேய்ந்ததாக இருக்ககூடாது.

(படுவான் பாலகன்) நாளைய தலைவர்களாக மாறக்கூடிய இளைஞர்களின் செயற்பாடு நுனிப்போல் மேய்ந்தது போன்றதான செயற்பாடாக இருக்க கூடாது என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார்.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற போதே இதனைக்குறிப்பிட்டார்.
பிரதேச செயலாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இளைஞர்களிடத்தில் ஆழமான தேடல்கள் இருக்க வேண்டும். நல்ல விடயங்களைப்பற்றி தேட வேண்டும். அதுபற்றி ஏனையோருக்கும் கூற வேண்டும். திறந்த திட்டமிடல்களை வகுக்க வேண்டும். நுனிப்போல் மேய்ந்தது போன்றதான செயற்பாடுகளாக அன்றி ஆழமான செயற்பாடுகளாக இளைஞர்களது செயற்றிட்டங்கள் அமைய வேண்டும். தூரநோக்கு சிந்தனை, கலாசாரங்களை கட்டிக்காக்கின்ற செயற்பாடுகளை முன்னெடுக்கப்பட்ட வேண்டும். எதிர்கால சந்ததிகளுக்கும் முறையாக கையளிக்க வேண்டும்.
இளைஞர்கள் திறமையானவர்களாக செயற்பட ஆரம்பித்தால் பிரதேசங்களில் பல்வேறான செயற்றிட்டங்களையும் நடைமுறைப்படுத்த முடியும். பல விடயங்களில் சாதனைகளையும் நிலைநாட்ட முடியும். எனவே இளைஞர்கள் சகல துறைகளிலும் காலூன்றி சாதித்து, பிரதேசத்தினை கட்டியெழுப்புவதற்கு ஒன்றுபடவேண்டும் என்றார்.