தமிழ் மொழியை கற்பிப்பதற்கு மேலைநாட்டர்களை நாடவேண்டிய சூழல் ஏற்படலாம்?

(படுவான் பாலகன்) தமிழ்மொழியை சிறப்பாக கற்பிப்பதற்கு மேலைத்தேய நாடுகளில் இருந்து இங்கு இறக்குமதி செய்து தமிழை கற்பிக்க வேண்டிய சூழல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. என மட்டக்களப்பு மேற்கு பிரதிக்கல்விப் பணிப்பாளர் க.ஹரிகரராஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு வலய தமிழ்மொழித்தினப்போட்டிகள் கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் நேற்று(05) சனிக்கிழமை நடைபெற்ற போது, ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அங்கு, அவர் உரையாற்றுகையில்,

தொலைபேசியில், விசைப்பலகையில் தமிழ் தட்டச்சு செய்வதற்கேற்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலைத்தேய நாட்டினரும் தமிழ்மொழிக்கு முக்கியத்தும் கொடுக்கின்றனர். இதன் மூலம் தமிழ்மொழியின் அவசியம் புலனாகின்றது.

ஆங்கிலமொழி தெரியவில்லையென்றால் வெட்கப்படத்தேவையில்லை. ஆனால் தாய்மொழி தமிழ்மொழி தெரியவில்லையாயின் வெட்கித்தலைகுனிய வேண்டும். மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழி பயிற்சி அளிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வருகைதந்து பிறர்நாட்டார் பயிற்சி அளிக்கின்றனர். தமிழ்மொழியினை பெருமைப்படுத்துவதில் நாம் கவனக்குறைவாக இருக்கின்றோம். இதனை பல செயற்பாடுகள் புலப்படுத்தி நிற்கின்றன. தமிழ்மொழியின் மீதான எமது கவனக்குறைவினால், ஆங்கிலமொழிக்கு பிறர்நாட்டார் உதவியை நாடுவதனைப் போன்று, எதிர்காலத்தில் தமிழ்மொழியை சிறப்பாக கற்பிப்பதற்கு மேலைத்தேய நாடுகளில் இருந்து, இங்கு இறக்குமதி செய்து தமிழை கற்பிக்க வேண்டிய சூழல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. என்றார்.