தமிழ்மொழியால் பெருமைப்படுகின்றோம் எங்களால் தமிழ்மொழி பெருமைப்படுகின்றதா?

(படுவான் பாலகன்) தமிழ்மொழியால் பெருமைப்படுகின்றோம் எங்களால் தமிழ்மொழி பெருமைப்படுகின்றதா? என்பது தொடர்பில் மாணவர்கள் சிந்திக்க வேண்டும். என மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தமிழ்மொழித்தினப் போட்டிகள் நேற்று(05) சனிக்கிழமை கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற போது, ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இதனைக் குறிப்பிட்டார்.

வலயக்கல்விப் பணிப்பாளர் தொடர்;ந்தும் உரையாற்றுகையில்,
தமிழ்மொழிகளை பற்றிய ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. பல நாடுகளிலும் தமிழ்மொழியை பின்பற்றுகின்றனர். தமிழ்மொழியால் பெருமைப்படுகின்றோம் எங்களால் தமிழ்மொழி பெருமைப்படுகின்றதா? என்பது தொடர்பில் மாணவர்கள் சிந்திக்க வேண்டும். வாசிக்கின்ற பழக்கம் படிப்படியாக குறைவடைந்து செல்வதினால் தமிழ் அறிவும் குறைவடைகின்றது.

பாடப்புத்தகம், பயிற்சி புத்தகங்களை தவிர மேலதிக வாசிப்பென்பது மாணவர்களிடையே கிட்டத்தட்ட பூச்சியம் நிலையை எட்டியுள்ளது. உயர்தரத்தில் தமிழ் பாடத்தினை கற்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றது. ஏனெனில் தமிழ் கஸ்டமாகவுள்ளது என்கின்றனர். பாடப்புத்தகங்களை மாத்திரம் நம்பியிருப்பதினாலேயே தமிழ் பாடம் கஸ்டமாகவுள்ளது. பாடப்புத்தகத்தினை மாத்திரம் நம்பினால் நமது அறிவை வளப்படுத்த முடியாது. வாசிப்பு இல்லாத எந்தமொழியுமே செழிமையடையாது. தமிழர்கள் என்று பெருமைப்படுவதாகவிருந்தால், தமிழ்மொழியிலுள்ள மேலதிகமான விடயங்களை வாசிக்க வேண்டும்.
புத்தகங்களை எழுதிவெளியிடுகின்றமை என்பதுவும் அரிதாகியுள்ளது. வெளியிட்ட பின் அதனை விற்பதற்கு கஸ்டப்படவேண்டியுள்ளது.

கஸ்டப்பட்டு விற்றாலும் அதனை வாசிக்க வைப்பது பகிரதபிரயத்தனமாகவுள்ளது. பாடசாலைகளுக்கு சென்றால் பாடசாலை நூலகத்தில், புத்தகங்களை விரித்து பார்த்தால் விரித்து பார்க்காத புத்தகங்கள் பலவிருக்கும். தொலைக்காட்சி, தொலைபேசியின் வருகையினால் வாசிப்பின் பழக்கம் குறைவடைந்திருக்கின்றது. பாடப்புத்தகத்தினை வாசிப்பதனையும் குறைத்து ஆசிரியர்கள் வழங்கும் விடயங்களை மாத்திரமே வாசிக்கும் பழக்கம்தான் மாணவர்களுடைய ஏற்பட்டிருக்கின்றது.
வாசிப்பதினால் மனித மூளையில் ஏற்படக்கூடிய அபிவிருத்திகள் தொடர்பில் பல ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. வாசிப்பதன் ஊடாக மூளை எவ்வளவு அளவு அபிவிருத்தி அடைகின்றது. எனவே மாணவர்கள் வாசிக்க பழகிக்கொள்ள வேண்டும். என்றார்.