மற்றவர்களின் கலாசாரத்தினை மதிக்க வேண்டும். அவர்களும் எமது கலாசாரத்தினை மதிக்க வேண்டும்

(படுவான் பாலகன்) மற்றவர்களின் கலாசாரத்தினை மதிக்க வேண்டும். அவர்களும் எமது கலாசாரத்தினை மதிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மண்முனை தென்மேற்கு இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற போதே இதனைக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஊடாக பல்வேறு செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவற்றில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும். அதேவேளை வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒற்றுமையினை கட்டியெழுப்புவதாக இளைஞர்சேவை மன்றத்தின் செயற்பாடுகள் அமையும். அதேவேளை ஆளுமையாளர்களாக உருவாவதற்கான களத்தினை ஏற்படுத்தும்.

இளைஞர்களால் பலவற்றினை சாதிக்க முடியும். அதேவேளை இளைஞர்கள் பலமாகவிருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவிகளையும் எதிர்பார்க்கத்தேவையில்லை. ஊக்கத்துடன் எந்த செயலையும் செய்வதன்மூலம் வெற்றியை காணலாம். நாம் எப்போதும் மற்றவரையும், அவர்களது கலாசாரத்தினையும் மதிக்க வேண்டும். அதே போன்று அவர்களும் எம்மையும் எமது கலாசாரத்தினையும் மதிக்க வேண்டும். இதன்மூலம் சரியான புரிதல் ஏற்படும் என்றார்.