ஒழுக்கமுள்ளவர்களாக இருந்தால் சமூகம் எம்மை மதிக்கும். ஒழுக்கமில்லையாயின் மிதிக்கும்.

(படுவான் பாலகன்) ஒழுக்கமுள்ளவர்களாக இருந்தால் சமூகம் எம்மை மதிக்கும். ஒழுக்கமில்லையாயின் மிதித்துவிடுவர். என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற போதே இதனைக் குறிப்பிட்டார்.
அவர்  அங்கு தொடர்ந்தும் உரைநிகழ்த்துகையில்,
இளைஞர்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு உடையவர்களாக இருக்க வேண்டும். அதேவேளை ஆளுமையுள்ளவர்களாவும் வளரவேண்டும். போட்டிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் பொறாமைகளை விலக்கிக் கொள்ளவேண்டும். அப்போதுதான் சிறந்த எதிர்கால தலைவர்களாக உருவாக முடியும்.

பல இளைஞர்கள் முகநூல் ஊடகவியலாளர்களாக இருக்கின்றனர். இதனை வரவேற்கின்றேன், அதேவேளை முகநூலில் சிறந்த விடயங்களை பதிவிட வேண்டும் என்பதனை எதிர்பார்க்கின்றோம். ஆனால் தற்கால இளைஞர்கள் சிலர் முகநூலிலே மற்றவர்களுக்கு மனச்சஞ்சலத்தினை ஏற்படுத்தும் விடயங்களை எழுதிவருகின்றனர். பிறரை வருத்தத்திற்குள்ளாக்கும் விடயங்களை எழுதுவது வளர்ந்து வருகின்ற எதிர்கால தலைவர்களுக்கு ஆரோக்கியமானதல்ல. இவ்விடயங்கள் தொடர்பில் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். எம்பின்னால் வருகின்றவர்களுக்கு நாம் வழிகாட்டிகளாக அமையவேண்டும்.

உயர்பதவிகளை வகிப்பதனாலையோ, கல்வி கற்றவர்களாக இருந்தால் மட்டுமோ சமூகம் எமக்கான அந்தஸ்தை தந்துவிடாது, ஒழுக்கமுள்ளவர்களாக இருந்தால்தான் சமூகம் எம்மை மதிக்கும். அதைவிடுத்து பதவிகளையும், பட்டங்களையும் மாத்திரம் வைத்திருந்துவிட்டு ஒழுக்கமில்லாதவர்களாக நடந்து கொண்டால் எம்மை சமூகம் மிதித்துவிட்டு சென்று விடும் என்றார்.