கிழக்கையும் மேற்கையும் பாலமாக இணைக்கும் சர்வதேச சைக்கிளோட்டம் பாசிக்குடாவில்

கிழக்கையும் மேற்கையும் பாலமாக இணைக்கும் ஸ்ரீ லங்கா டீ கப் சர்வதேச சைக்கிளோட்டம் இன்று வெள்ளிக்கிழமை பாசிக்குடாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாசிக்குடாவிலிருந்து மஹியங்கனை ஊடாகக் கண்டிக்குக் சென்று, கண்டியிலிருந்து நீர்கொழும்பை மே மாதம் 06ஆம் திகதி சென்றடையவுள்ளதென எல்.எஸ்.ஆர் நிறுவனத்தின் தவிசாளர் திலக் வீரசிங்க தெரிவித்தார்.

எழுபது சைக்கிளோட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் இப் போட்டியில் இலங்கை, நெதர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், பாக்கிஸ்தான், பங்களாதேஸ் உட்பட்ட பல நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

எல்.எஸ்.ஆர் நிறுவனத்தின் முழு அனுசரனையுடன் நடைபெறும் ஸ்ரீ லங்கா டீ கப் சர்வதேச வீதி சைக்கிளோட்டம் எல்.எஸ்.ஆர் நிறுவனத்தின் தவிசாளர் திலக் வீரசிங்க தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு ஆளுனர் ரோகித போகலாகம கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சித்திரவேல், வாகரை பிரதேச சபை தவிசாளர் எஸ்.கோணலிங்கம், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதிக்கான அமைப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் ஸஹ்வி, பிரதேச சபைகளின் பிரதி தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இச்சைக்கிள் ஓட்டப் போட்டியானது முதலாம் நாள் பாசிக்குடாவில் இருந்து மஹியங்கனைக்கு 133 கிலோ மீற்றரும், இரண்டாம் நாள் மஹியங்கனையில் இருந்து கண்டிக்கு 92 கிலோ மீற்றரும், கண்டியில் இருந்து நீர் கொழும்புக்கு 125 கிலோ மீற்றருமாக 350 கிலோ மீற்றர் கொண்டதாக அமையவுள்ளது.

சர்வதேச ஒழுங்கு விதிமுறைகளுக்கமைய சைக்கிளோட்ட போட்டியானது நடைபெறவுள்ளது. ஒவ்வொரு சைக்கிளோட்ட போட்டியாளர்களுக்கு வானலைகள் மூலமாக தொடர்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் குறிப்பிட்ட அணியின் காரை தொடர்பு கொள்ள முடியும் அதில் அச்சைக்கிளோட்ட போட்டியாளர்களுக்கு தேவைப்படும் சகல தேவைகளுக்குமான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒவ்வொரு சைக்கிளுக்கும் கமரா பொருத்தப்பட்டுள்ளதால் அவர்கள் சைக்கிளோட்டம் முடிவடையும் இடத்தை அடையும் போது அவர்களின் நேரக்கணிப்பீடு கணிக்கப்பட்டு அவர்களின் நிலைகள் குறிக்கப்படும். இந்த சைக்கிளோட்ட போட்டியின் மூலம் சர்வதேச அனுபவங்களை எமது நாட்டு போட்டியாளர்கள் பெறுகின்றனர் என்றும், விளையாட்டுத்துறையின் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் எல்.எஸ்.ஆர் நிறுவனத்தினால் 18 மில்லியன் ரூபாய் நிதியொதிக்கீட்டின் கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதெனவும் எல்.எஸ்.ஆர் நிறுவனத்தின் தவிசாளர் திலக் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.