சுவாமி விபுலானந்த அடிகளாரின் 126வது பிறந்த தின நிகழ்வு

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 126வது பிறந்த தின நிகழ்வு, விபுலானந்தம் சஞ்சிகை வெளியிடு

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 126வது பிறந்த தின நிகழ்வு, விபுலானந்தம் சஞ்சிகை வெளியீடும் மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் மாநகர முதல்வர் தி.சரவணபவான் தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (03) நீரூற்றுப் பூங்காவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராசசிங்கம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், கல்லடி இராமகிருஸ்ண மிஷன் சுவாமி, கிழக்கு மாகாண முன்னாள் பிரதிதித் தவிசாளர் இ.பிரசன்னா, மாநகரசபையின் பிரதி முதல்வர் கே.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன், உதவி ஆணையாளர் கே.தனஞ்செயன், வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சுவாமி விபுலானந்த அடிகளாரின் உருவச் சிலைக்கு அதிதிகளால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, அடிகளாரின் பாடல்கள் இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது விபுலானந்தம் சஞ்சிகை வெளியிடப்பட்டதுடன், மாநகர முதல்வரினால் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் சுவாமி விபுலானந்தரின் 126வது பிறந்த தின சிறப்பாக பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர்,

மட்டக்களப்பு என்பதன் பெருமையை உலகறியச் செய்த மகானின் நினைவுகளை என்றென்றும் மனதில் நிறுத்தி அதனைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் தலையாய கடமையாகும் என்று தெரிவித்த அவர், சுவாமி விபுலானந்தரின் நூல்களை அனைத்து நூலகங்களிலும் பராமரித்து இவ்வாறான அவரது நிகழ்வுகளின் போது அந்நூல்களில் இருந்து மாணவர்களுக்கு போட்டிகளை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இதன் போது அவர் வேண்டுகோள் விடுத்தார்.